web log free
September 25, 2020

தற்கொலை தாக்குதல் தகவலை- மைத்திரிக்கு முதலில் கூறினேன்

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில், அப்போது தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தானே முதலில் தகவல் அளித்ததாக , அப்போதைய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், தற்போதைய தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரொஹான் சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில்  இடம்பெற்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

இதன்போது சிரேஷ்ட அரச சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்கவின் நெறிபப்டுத்தலில் சாட்சியமளிக்கும் போதே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் பிரதானியான ரொஹான் சில்வா மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார். 

அத்துடன் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் தான் ஒவ்வொரு மாதமும்  உளவுத்தகவல் பகுப்பாய்வு கூட்டம் ஒன்றினை நடாத்துவதாகவும், அதில் 2019 பெப்ரவரி மாதம் நடாத்தப்பட்ட மாதாந்த கூட்டத்தின் போது, அரச உளவுச் சேவையின் ஜனக செனவிரத்ன பங்கேற்று,  இலங்கையிலிருந்து 28 பேர் சிரியாவுக்கு சென்றுள்ளதாகவும், அதில் 3 பேர் விமானத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும்  தெரிவித்ததாக  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் சில்வா சாட்சியமளித்தார்.

அந்த சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு:

' ஜனாதிபதியின் ஒவ்வொரு  விஜயங்களுக்கு முன்னரும் ( உள் நாட்டு, வெளிநாட்டு) அவரது பாதுகாப்பை மையபப்டுத்தி விஷேட உளவுத் துறை அறிக்கையை நான் பெற்றுக்கொள்வேன்.  அதே போன்று ஒவ்வொரு மாதமும் அரச உளவுச் சேவையினதிகாரிகள், பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரிகளுடன்  கலந்துரையாடி ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து பகுப்பாய்வு செய்வேன்.  அதன்படி 2019 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி அத்தகைய மாதார்ந்த பகுப்பாய்வு கூட்டம் நடந்தது. 

அந்த கலந்துரையாடலில் அரச உளவுச் சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லலித் நாணயக்கார பங்கேற்றார். அவர் ஈரான், ஈராக்கில் ஐ.எஸ். ஐ.எஸ். பின்வாங்கியுள்ள நிலையில், அவர்களின் உறுப்பினர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதாகவும், அவ்வாறுதிரும்புவோர் அவ்வந்த நாடுகளில் முஸ்லிம் அல்லாதோரை கொலைசெய்ய பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

அதன்படி இலங்கையிலிருந்து சுமார் 125 பேர் வரை ஐ.எஸ். ஐ.எஸ். கொள்கைகளை பின்பற்றுவதாகவும், அவ்வாறு நாடு திரும்பிய இருவர் வெல்லம்பிட்டி மற்றும் தெஹிவளையில் இருக்கின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.  எனினும் அதனால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒன்றும் அவர் கூறவில்லை.

 

 அத்துடன், குறித்த அரச உளவுச் சேவை அதிகாரியின் அறிக்கை பிரகாரம்,  அவ்வாறு நாட்டுக்குள் வருவோர் ட்ரோன் விமான தாக்குதல், இரசாயன குண்டுத் தாக்குதல்கலைக் கூட நடாத்தலாம் என கூறினர். 

அதனால் நாம் உலகில் ஏனைய நாடுகளில் நடந்த சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பகுப்பாய்வு செய்து ஜனாதிபதியின் பாதுகாப்பை பலப்படுத்தினோம்.

 இந் நிலையில் தான், அவ்வாறு நடந்த மற்றொரு உளவுத் தகவல் பகுப்பாய்வு கூட்டத்தில் பங்கேற்ற அரச உளவுச் சேவையின்  ஜனக செனவிரத்ன எனும் அதிகாரி இலங்கையில் இருந்து ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பில் சேர 28 பேர் சென்றுள்ளதாகவும் அவர்களில் மூவர் அங்கு விமானத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார். 

அத்துடன் மேலும் 100 பேர் வரை இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ். கொள்கைகளைப் பின்பற்றுவதகாவும் குறிப்பாக அவர்கள் கொழும்பு,கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழ்வதாகவும் அவர் கூறினார். 

கண்டி - மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் கூட, ஐ.எஸ்.  சிந்தனைகளால் உந்தப்பட்ட இளைஞர் குழுவொன்றின் வேலை என அவர் அப்போது தெரிவித்தார்.  

 இவ்வாறான பின்னணியிலேயே கடந்த 2019 ஏபரல் 12 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்புக்கு சென்றார். அவர் அங்கு செல்லும் போதும் உளவுத் துறைக்கு சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் தகவல்கள், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தும் அவர்கள் அதனை எனக்கு தரவில்லை.

 

 உண்மையில் இவ்வளவு பாரதூரம் மிக்க உளவுத் தகவலை அவர்கள் கண்டிப்பாக ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரதானி எனும் ரீதியில் எனக்கு தந்திருக்க வேண்டும். அதில் உள்ள தகவல்களை நான் அப்போது பார்த்திருந்தால்  நிச்சயமாக ஜனாதிபதி மைத்திரியின் மட்டக்களப்பு விஜயத்தை தடுத்திருப்பேன்.

 உண்மையில் இந்த தாக்குதல்கள் நடக்கும் வரை நாம் அவ்வாறு ஒரு தாக்குதல் நடக்கப் போகிறது என எந்த வகையிலும் அறிந்திருக்கவில்லை. தாக்குதல் நடக்கும் போது ஜனாதிபதி தனிப்பட்ட விஜயம் ஒன்றின் பொருட்டு சிங்கப்பூரில் இருந்தார். நான் தான் முதலில் ஜனாதிபதிக்கு இப்படி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது, தகவல்களை தேடிச் சொல்கிறேன் எனக் கூறினேன்.

 நான் அதனை கூறியதும்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் நான் பாதுகாப்புச் செயலரை தொடர்புகொள்கிறேன் எனக் கூறினார்.

 

 முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருக்கும் போது, அதாவது 2019.04.19 அல்லது 20 ஆம் திகதி இரவு அரச உளவுச் சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன எனக்கு அழைப்பெடுத்தார். 

ஜனாதிபதி வெளிநாட்டிலா எனவும் எப்போது வருவார் எனவும் என்னிடம் கேட்டார். எனினும் ஜனாதிபதி வெளிநாட்டில் இருப்பதை அவர் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.

 அவருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கும் தொடர்பாடல் கட்டமைப்பு இருந்தன. அவர் தொலைபேசியில் கூட மைத்திரிபல சிறிசேனவும் கதைப்பார். 

வெளிநாட்டில் உள்ள முன்னாள் ஜனாதிபதியை எப்படி தொடர்புகொள்ள முடியும் என்பதையும் நிலந்த அறிந்தே இருந்தார்.' என சாட்சியமளித்தார்.

© 2019 Asian Mirror (pvt) LTD