web log free
March 28, 2024

பாகிஸ்தான் கிரிக்கெட் அதிரடி அறிவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக  ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அட்டவணையை மாற்றுவதற்கு சம்மதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கெரோனா வைரஸ் தொற்றால் இம்முறை ஐ.பி.எல். தொடர் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், உலக இருபதுக்கு 20 தொடரும் ஒத்திவைக்கப்படுமா என்ற பேச்சும் அடிபடுகிறது.

அவ்வாறு உலக இருபதுக்கு 20  தொடர் தள்ளிப்போனால் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்தப்படலாம் என்ற கணிப்பும் உள்ளது.

உலக இருபதுக்கு 20 தொடருக்கு முன்னர், ஆசிய அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20  கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டெம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் தொடரை நடத்தும் உரிமத்தை பெற்றுள்ளது.

கொரோனா தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு போட்டிக்கு தயாராகும் நிலை ஏற்பட்டால் ஐ.பி.எல். போட்டிக்காக ஆசியக் கிண்ண போட்டி அட்டவணையை எக்காரணம் கொண்டும் மாற்ற விடமாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பிரதான செயற்பாட்டு அதிகாரலி வசீம் கான் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து வசிம் கான் கூறுகையில்,

‘‘ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடத்தப்பட வேண்டும். இதுதான் எங்களது நிலைப்பாடு. இதில் உறுதியாக இருக்கிறோம்.

ஒருவேளை கொரோனா தொற்றால் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் மாத்திரமே, குறித்த திகதியில் நடத்தப்பட மாட்டாது. ஐ.பி.எல். போட்டிக்காக நாங்கள் ஆசியக் கிண்ணத் தொடரை ஒத்திவைக்க சம்மதிக்கமாட்டோம்.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடத்தப்படலாம்  என சிலர் கூறி வருகின்றனர். ஆனால் எங்களை பொறுத்த வரைக்கும் அதற்கு வாய்ப்பே இல்லை.

ஒரு நாட்டின் உறுப்பினருக்காக ஆசியக் கிண்ணத் தொடரை உங்கள் எண்ணம்போல் மாற்றினால் அது சரியல்ல. அதற்கு எங்களுடைய ஆதரவு இருக்காது’’ என்றார்.

 

Last modified on Saturday, 25 April 2020 14:51