web log free
July 18, 2019
editor

editor

கல்விப்பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், 5ஆம் தர மாணவர்களுக்கான புலமை பரீட்சை ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் ஜுலை மாதம் 30 ஆம் திகதியுடனும், புலமை பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் ஜுலை மாதம் 31 திகதியுடனும் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அக்கரபத்தனை பிரதேசத்தில் இன்று (18) பெய்த கடும் மழைக்காரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், காணாமல் போன மற்றுமொரு மாணவியை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டொரின்டன் தோட்டத்திலிருந்து கொத்மலைஓயாவுக்கு நீரைக் காவிச் செல்லும் கால்வாய் ஒன்றுக்கு அருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்ல முயன்ற மாணவன் மற்றும் மாணவிகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது, மாணவன் உயிர் தப்பியுள்ளதுடன், மாணவிகள் இருவர் காணாமல் போயிருந்தனர். இந்த நிலையில் அதில் ஒரு மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

12 வயதுடைய இரண்டு மாணவிகளே இவ்வாறு நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக மீளாய்வு மனுவை
சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னதாக தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்க தவறிய குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டமை, சட்ட விரோதமானது என, சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மீளாய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறித்த மனுவை செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு விசாரணை தொடர்பாக விசேட மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீட்டு மனு நீதியரசர்களான சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பி தெல்தெனிய ஆகியோர் முன்னைலையில் விசாரணைக்கு வந்தது.

அவன்காட் சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க, குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க தன்னை கைதுசெய்வதை தவிர்க்குமாறு கோரி தாக்கல் செய்த முன்கூட்டிய பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான ரங்க திசாநாயக்க நேற்று நிராகரித்திருந்தார்.

அத்துடன், ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்கள் ​தொடர்பில், பிணை வழங்குவதற்கான அதிகாரம் நீதவான் நீதிமன்றத்துக்கு இல்லையென, நீதவான் கூறியிருந்தார்.

முன்னதாக, அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க உள்ளிட்ட 8 பேரை கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் அறிவுறுத்தியிருந்தார்.

அதனையடுதே, சமன் திசாநாயக்கவால், முன்கூட்டிய பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் சுமூகமான தீர்மானங்கள் சில எட்டப்பட்டதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பியும் பலர் கலந்துக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாக அரவிந்தகுமார், ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மனோ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

அவர்களுடன், தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம் மாண்டாவெல, இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் உமா மகேஸ்வரன், அமைச்சர் மனோ கணேசனின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோம் பங்கேற்றுள்ளனர்.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இரண்டு திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, களனி கங்கைக்கு அண்மித்த கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் தமது தேவைகளுக்காக களனி கங்கையின் நீரினை பயன்படுத்தும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

எந்தவிதமான வாதங்களை முன்வைத்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தாம் கடுமையான மற்றும் தெளிவான முறையில் எதிர்ப்பு வெளியிடுவதாக ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் அறிவித்திருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்ந்து கைவிடப்படவேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவை இரத்துச்செய்யப்படவேண்டும் என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தால், நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஆசிரியர்கள் சங்கமும் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்திருந்த நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கம் இவ்வாறான பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு அனைத்து ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை காட்டிக்கொடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை ஆசிரியர்கள் சங்கமானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த ஒரு தொழிற்சங்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவிகளை ராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்கும் தினம் தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானத்துக்கும் வரவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இணைந்து பிரதமருடன் கலந்துரையாடி அதற்கான தினத்தினை தெரிவித்து செய்வார்கள் என, தான் எதிர்பார்ப்பதாகவும் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மீண்டும் அமைச்சு பதவியை பொறுப்பேற்றுக்கொள்வது தொடர்பான ரிஷாட் பதியுதீனின் தனிப்பட்ட கருத்து தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

எவ்வாறயினும், பதவிகளை ராஜினாமா செய்த அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்பதாகவே முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Page 1 of 150
© 2018 Asian Mirror (pvt) LTD