web log free
March 07, 2021
editor

editor

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையில் 70 வீதமானவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கிடைக்கும் தடுப்பூசிகளில் உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமானவர்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதுடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் 50 வீதமானவர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் சுகாதார தரப்பினர் துரிதமாக செயற்பட ஆரம்பித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 34 இலட்சத்து 41 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது இலவசமாக உலக சுகாதார ஸ்தாபனம் எமக்கு வழங்கும் தடுப்பூசிகளாகும்.

அது தவிர்ந்து மேலும் 50 வீதமானவர்களுக்கும் கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடியும். அவை ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் நிதி உதவியில் நாட்டில் 50 வீதமானவர்களுக்கு வழங்க முடியும்.

ஆகவே ஒட்டு மொத்தமாக 70 வீதமானவர்களுக்கு இந்த ஆண்டு நடுப்பகுதியில் கொவிட் வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடியும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மரணித்த தமிழீழ விடுதலைப்புலிகளை தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவேந்துவது இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும்.

எனவே, விடுதலைப்புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபியைத் துணைவேந்தர் இடித்து அகற்றியுள்ளார். இது அவரின் தற்றுணிவை எடுத்துக்காட்டுகின்றது.

இறுதிப்போரில் மரணித்த பொதுமக்களை நினைவேந்தும் தூபி என்ற பெயரில் அங்கு அமைக்கப்பட்டிருந்தது புலிகளை நினைவேந்தும் தூபியாகும்.

இதைப் பல்கலைக்கழகத்தில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. அதற்கமைய நல்லதொரு தீர்மானம் எடுத்து அந்தத் தூபியைத் துணைவேந்தர் இடித்துள்ளார்.

மூவின மாணவர்களின் நன்மை கருதி இந்தத் தீர்மானத்தை அவர் எடுத்திருப்பார் என நான் நினைக்கின்றேன். எனவே, மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கல்வியைத் தொடர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் கடந்த 3 மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதனால் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. அதேசமயம் பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள நிம்ருஸ் மாகாணம் காஷ் ரோடு என்ற மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் இராணுவம் தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து வான் தாக்குதல் நடத்தியது.‌

இதன்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் குண்டுகள் விழுந்து வெடித்ததில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 15 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த வான் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் இராணுவம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று காலை நடந்த கார் குண்டுவெடிப்பில் மக்கள் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஷியா வடான் என்பவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 232ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 3 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நீர்கொழும்பு சிறைச்சாலையில் 62 வயது ஆண் கைதி ஒருவர், கொழும்பு 14ஐ சேர்ந்த 80 வயது பெண், இரத்தினபுரியை சேர்ந்த 64 வயது ஆண் ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி கிரேண்ட்பாஸ், மாளிகாவத்தை, தெமட்டகொடை முதலான பொலிஸ் அதிகார பிரிவுகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின், வத்தளை பொலிஸ் அதிகார பிரிவின் வெலிக்கடமுல்ல கிராம சேவகர் பிரிவின் துவ வத்த, கிரிபத்கொடை பொலிஸ் அதிகார பிரிவின் ஹுணுப்பிட்டி, வடக்கு கிராம சேவகர் பிரிவின் வெடிகந்த மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் அதிகார பிரிவின் தல்துவ கிராம சேவகர் பிரிவின் எம்.சி வீடமைப்பு யோசனைத் திட்டம் என்பன இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம், கோத்தமிபுர தொடர்மாடி குடியிருப்பு, பொரளை – கோத்தமிபுரயின் 24ம் தோட்டம், 78ம் தோட்டம் என்பன நேற்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீள அமைப்பதற்கான அடிக்கல் இன்று காலை நாட்டப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்ட அதே இடத்திலேயே அதனை மீள நிர்மானிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, இடித்தழிக்கப்பட்ட நினைவிடத்தை மீள அமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.

இதனையடுத்து துணைவேந்தர் தலைமையிலலேயே  நினைவிடத்தை மீள அமைப்பதற்கான அடிக்கல் மாணவர்களினால் நாட்டப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவனும் இணைந்துகொண்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்க வேண்டும், பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு பொலிஸார், இராணுவத்தினர் விலகவேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் நாளை திங்கட்கிழமை முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு வடக்கு- கிழக்கிலுள்ள அனைத்து மக்களையும் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  கோரியுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) மாலை, விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். இரா.சாணக்கியன் குறித்த காணொளியில் மேலும் கூறியுள்ளதாவது,  ‘எதிர்வரும் 11ஆம் திகதி (திங்கட்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹர்த்தாலுக்கு வடக்கு- கிழக்கிலுள்ள அனைத்து மக்களினதும் பூரண ஆதரவினை எதிர்பார்த்து நிற்கின்றோம். அன்றைய தினம் கடைகளை அடைத்து தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக செய்கின்ற அநீதிகளுக்கு நாம் அனைவரும் ஒருமித்த குரலாக எதிர்ப்பினை வெளியிட வேண்டும்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் உடைக்கப்பட்டுள்ளமையானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

அதேப்போல பல்வேறு விடயங்களில் சிறுபான்மை மக்களை இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்கிக்கொண்டு வருகின்றது. நாங்கள் எங்களுடைய எதிர்ப்பினை இந்த இடத்தில் நிச்சயமாக தெரிவிக்க வேண்டும்.

அந்தவகையில் கடந்த காலத்தில் எங்களுடைய அரசியல் கருத்துக்கள் வித்தியாசமாக இருந்தாலும், வடக்கு- கிழக்கில் வாழும் அனைவரும் ஒருமித்த குரலுடன் இந்த விடயத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

கடந்த தேர்தலில், கடந்த காலத்தில் எங்களுடைய அரசியல் கருத்துக்கள், அரசியல் பின்னணிகள் வேறாக இருந்தாலும் கூட, இந்த விடயத்தில் எங்களுடைய அன்பார்ந்த,பணிவான ஒரு வேண்டுகோள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒருமித்த குரலாக இந்த ஹர்த்தாலை நடத்த வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவரின் பிரத்தியேக செயலாளருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால்இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய 118 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதாவது,  தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய சமய பெரியார்கள் ஐந்து பேர் உட்பட ஹெட்டிப்பொலவிலுள்ள அலுவலகத்திற்கு மக்கள் சந்திப்பு தினத்தன்று சமூகமளித்த 75 பேரே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை அமைச்சரின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Page 2 of 614
© 2019 Asian Mirror (pvt) LTD