web log free
March 07, 2021
editor

editor

எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி முதல், பிரத்தியேக வகுப்புகளை மீள ஆரமபிக்க தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

சுகாதார வழிமுறைகளைப் பேணியவாறு குறித்த கல்வி நடவடிக்கைகளைத் தொடர அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி முதல் இந்து, முஸ்லிம், கத்தோலிக்க, பௌத்த மத கல்வி வகுப்புகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, புத்தசாசன, மத விவகார மற்றம் கலாசார் அமைச்சு அறிவித்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர ஏனைய பகுதிகளில் இவ்வாறு மாணவர்களின் மத மற்றும் பிரத்தியேக கல்வி நடவடிக்கைகளைத் தொடர அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

அங்கு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகளின்றி முடிவடைந்ததுள்ளது.

நேற்று மாலை கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

குறித்த பேச்சுவார்த்தையில், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் மற்றும் தொழில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, தொழிற்சங்கங்கள் சார்பாக கலந்துகொண்டவர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்த போதும், முதலாளிமார் சம்மேளனத்தினர் அதற்கு இணங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பேச்சுவார்த்தை எந்தவித தீர்மானங்களும் இன்றி முடிவடைந்துள்ளது.

எவ்வாறாயினும் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கான மாற்று வழிகளை அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

2021 ஜனவரி முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும் என்று கடந்த நவம்பர் மாதத்தில் வரவு செலவு திட்டத்தை முன்வைத்து பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நேர்மையுடன் மக்களுக்கு சேவையாற்றும் அரச அதிகாரிகள் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பு ரீதியில் முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு அலரிமாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற ‘கிராமத்துடன் கலந்துரையாடல்  செயற்றிட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அதிகாரிகளைத் தெளிவுபடுத்தும்  நிகழ்விலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேர்தலை எதிர்பார்த்து எவ்விடயமும் இந்தவருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. நாம் மக்களுக்கு அவ்வாறான மோசடிகளை செய்யமாட்டோம் என்பதை நாம் ஏற்கனவே கூறியிருக்கின்றோம் என்று இதன்போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இனிவரும் காலங்களிலும் அவ்வாறு செய்யப்போவதில்லை. இந்த வரவு செலவுத் திட்டம் கிராம விவசாயிகள், மீனவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை மேம்படுத்துவதற்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்லும்போது மக்களின் தேவை எமக்கு புலப்படும். புத்தகத்தில் உள்ளவற்றிற்கும், நிர்வாக விதிமுறைகள், நிதி விதிமுறைகளில் உள்ளவற்றிற்கும், மக்கள் கோருகின்றவைக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவற்றை மக்களின் தேவைக்கு ஏற்றவகையில் கையாண்டு பணியாற்றும் சவாலே அதிகாரிகளுக்கு உள்ளது. இதன்படி நேர்மையுடன் மக்களுக்கு சேவையாற்றும் அரச அதிகாரிகள் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பு ரீதியில் முழுமையான பாதுகாப்பை வழங்குவோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில்ராஜபக்‌ஷவும்  கலந்துகொண்டிருந்தார்.

பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி அவர் ஹிக்கடுவ பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மாடுகளுக்கிடையே புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாக மிருக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

‘கெஃப்ரி பொன்ஸ்’ என்ற வைரஸ் ஒன்றே இவ்வாறு பரவி வருகின்றது என கண்டறியப்பட்டுள்ளதாக மிருக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக பொலனறுவை, அநுராதபுரம், கண்டி உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான மாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொற்றுக்கு உள்ளான மாடுகளின் உடலில் காயங்கள் மற்றும கட்டிகள் ஏற்படுதல், காய்ச்சல், உணவுகளை தவிர்த்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என்பதுடன், தொற்றுக்குள்ளாகியுள்ள பசுக்களிடமிருந்து பால் சுரப்பது வெகுவாக குறைவடையும் அதேவேளை, பசுக்கள் கர்ப்பம் தரித்தலும் குறைவடையும் என கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்த வைரஸால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது என கூறப்படுகின்றது.

இந்நிலையில் மாடுகளுக்கு இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அது தொடர்பில் அரச மிருக வைத்தியருக்கு அறிவிக்குமாறு மாடு வளர்ப்பவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின்  சில பகுதிகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொட்டாஞ்சேனை, பாபர் வீதி, ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகள், கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெடேவத்தை பகுதி  ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொட்டாஞ்சேனை பொலிஸ்  பிரிவு கடந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சபை முறைமையில் மாற்றம் செய்யாது அதனை தற்போது உள்ளவாறே பேண வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று, பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே சஜித் பிரேமதாஸ இதனை கூறியுள்ளார்.

நாங்கள் 13 ஆவது திருத்தத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். அது நாட்டில் இறைமைக்கு பாதிப்பை இல்லை என்று உயர்நீதிமன்றமே கூறியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மாகாண சபை முறைமையில் மாற்றம் செய்யக் கூடாது. அது தற்போது உள்ளவாறே பேணப்பட வேண்டுமென்பதே எமது கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி மாகாண சபை முறைமை பலப்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, அதனை பலவீனப்படுத்த எவருக்கும் இடமளிக்கக் கூடாது எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், பாராளுமன்றமும் செனட் சபையும் இருக்கும் Capitol கட்டடத்திற்கு அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடியபோது ஆர்ப்பாட்டம் மூண்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியதோடு துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தயார் நிலையில் இருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சுடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செனட் சபைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், ஜனாதிபதி தேர்தலில் டிரம்பே வென்றதாக முழக்கமிட்டார்.

துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) உட்பட செனட் சபையில் கூடியிருந்த உறுப்பினர்கள் பொலிஸாரின் உதவியுடன் சம்பவ இடத்திலிருந்து வெளியேறினர்.

பைடனின் வெற்றியை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்துவதை செனட் சபை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளதுடன் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.

தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக வன்முறையை தூண்டும் வகையில் ட்ரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றியதையடுத்து, டுவிட்டர் நிறுவனம் குறித்த பதிவுகளை நீக்கியுள்ளதுடன், கணக்கையும் முடக்கியுள்ளது.

நேற்று மாலை முதல் 24 மணித்தியாளங்களுக்கு இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ட்ரம்ப் வாஷிங்டனில் நடைபெற்றுவரும் வன்முறையை தூண்டும் வகையில் நேற்று காலை பதிவிட்ட மூன்று பதிவுகளை நீக்க வேண்டும் என்றும் மீண்டும் இவ்வாறு டுவிட்டர் விதிகளை மீறும் விதத்திலான நடிவக்கைகளில் ட்ரம்ப் ஈடுபட்டால், அவரின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்று டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பின் குறித்த பதிவுகள் பேஸ்புக், யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளன.

ட்ரம்பின் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை 88 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அவ்வாறு ட்ரம்பின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுமாயின் அது அவருக்கு மிகப்பெறிய இழப்பை ஏற்படுத்தும்.

இதேவேளை, ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை வீட்டிற்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்திருந்த போதும், தேர்தல் மோசடி பற்றிய தவறான கூற்றுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Page 4 of 614
© 2019 Asian Mirror (pvt) LTD