web log free
March 07, 2021
editor

editor

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முன்வைத்துள்ள கருத்துகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்களுக்கு எம்.ஏ. சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக முன்னெடுக்கபட வேண்டும் என்று இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அதிகார பகிர்வு விடயத்தில் அரசியல் அமைப்பில் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டை கையாளும் என தாம் நம்புவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் முன்வைத்துள்ள இவ் கருத்துகளுக்காக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என சகலரது நலன்களுக்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு உறுதிப்பாடு ஒன்றினை கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

அரசாங்கத்தின் உண்மையான எதிர்பார்ப்பு இதுவென்றால், அதற்காக தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் இரண்டு அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கூரை மீதேறி, தீ மூட்டியுள்ளனர்.

தடுப்பு முகாமில் தாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக தெரிவித்தே, அகதிகள் இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தாம் அனுமதி கோரியதாகவும் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து கலவரத்தில் ஈடுபடவேண்டியேற்பட்டதாகவும் அகதியொருவர் தெரிவித்துள்ளார்.

‘நாளொன்றிற்கு 22 மணித்தியாலங்கள் உள்ளே பூட்டிவைக்கின்றனர், எங்கள் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது எங்களைக் கைதிகள் போல நடத்துகின்றார்கள்’ என கலவரத்தில் ஈடுபட்ட அகதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக தாம் உளவியல் மற்றும் உடல் நல ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினருடன் இணைய விரும்புகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அகதிகள் மெத்தைகளை தீ மூட்டுவதையும் கூரையின் மேல் ஏறி நின்று “போதும் போதும்” என கோசங்களை எழுப்புவதையும் காண்பிக்கும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயல்பவர்கள் மற்றும் குற்றவியல் நடவடிக்கை காரணமாக விசாக்கள் இரத்து செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட 225 பேர் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசினால் நவம்பர் இறுதியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய சுகாதார வழிமுறைகளின் கீழ் பாடசாலை விளையாட்டு போட்டிகளை ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டலின் பிரகாரம், படிப்படியாக பாடசாலை விளையாட்டு போட்டிகளை ஆரம்பிக்கின்றமை குறித்து அவதானம் செலுத்துமாறு சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொவிட் – 19 தொற்று காரணமாக நிறுத்தப்பட்டுள்ள பாடசாலை விளையாட்டு போட்டிகளை ஆரம்பிக்கின்றமை தொடர்பில் சுகாதார அமைச்சில் இன்று  (06) விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

கொவிட் வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படும் மேல் மாகாணத்தை தவிர, ஏனைய மாகாணங்களில் பாடசாலை விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மாணவர்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விளையாட்டு போட்டிகளில் பங்குப்பற்ற செய்ய வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாடசாலை மட்டத்தில் நடத்தப்படும் குழு விளையாட்டுக்கள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றமை குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதிகளவிலானோரின் பங்குப்பற்றுதல் இன்றி, போட்டிகளை நடத்துவது சிறந்தது என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக இடம்பெறும் என தாம் எதிர்பார்க்கின்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு விடயத்தில் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டைக் கையாளும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலங்கையிலும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் நிதி மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து இரு தரப்புக் கலந்துரையாடல்களை மேற்கொள்வதே விஜயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதிகளை மேற்படுத்தல், சக்தி மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு இந்தியாவின் குறுகிய மற்றும் மத்திய கால ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து உற்பத்தி நடவடிக்கைகளுக்கான விசேட மையங்கள் உட்பட இந்திய தொழில் முனைவோர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வழிகாட்டல்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு, இந்திய வழிகாட்டல்களை வழங்க ஆர்வமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடல் பாதுகாப்பு குறித்து இந்தியாவும் இலங்கையும் பல்வேறு விடயங்களில் இணங்கியுள்ளதாகவும், மீன்பிடித்துறை சார் விடயங்களில் கலந்துரையாடல்கள் தொடரும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை- இந்திய இரு தரப்பு இராஜதந்திர உறவுகளை மேம்படுத்திக்கொள்வதற்கான அடுத்த கட்டக் கலந்துரையாடல்களுக்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 10 விக்கெட்டுகளால் வெற்றிகொண்ட தென் ஆபிரிக்க அணி, தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

ஜொஹன்னஸ்பேர்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலளித்தாடிய தென் ஆபிரிக்கா 302 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி 145 ஓட்டங்களால் பின்தங்கிய இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸிலும் தடுமாற்றமான நிலையை எதிர்நோக்கியது. என்றாலும் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் அபாரமான ஆட்டம் அணிக்கு ஆறுதல் கொடுத்தது.

4 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களுடன் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது 10 ஆவது டெஸ்ட் சதத்தை அடைந்தார். 128 பந்துகளை சந்தித்த அவர் 19 பௌண்டரிகளுடன் 103 ஓட்டங்களைக் குவித்தார்.

நிரோஸன் திக்வெல்ல 36 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 16 ஓட்டங்களையும் பெற, இலங்கை அணி மேலும் 61 ஓட்டங்களை பெற்றதுடன் கைவசமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகளையும், லுதோ சிபாமளா 3 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோட்ரிஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 211 ஓட்டங்களுடன் முடிவுக்குவர, தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு 67 ஓட்டங்களாக நிர்ணயமானது. இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியீட்டியது.

மூன்று நாட்களுடன் முடிவுக்கு வந்த இந்தப் போட்டியில் அய்டன் அக்ரம் 36 ஓட்டங்களையும், டீன் எல்கர் 31 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் தொடரின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் டீன் எல்கர் தன்வசப்படுத்திக்கொண்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் கடந்த 3 ஆம் திகதி, மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று மற்றும் சுவாசக் கோளாறு ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் கடந்த 2 ஆம் திகதி, களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று மற்றும் இரத்தம் விஷமடைந்தமை ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 217 ஆக உயர்வடைந்துள்ளது.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையில் கொழும்பில் புதன்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இதன்போது எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திய புதிய பிரேரணை தொடர்பில் தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட்ட நிலைப்பாடொன்றை வெளிப்படுத்துவது தொடர்பில் பேச்சுகள் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே புதிய பிரேரணைக்கான முன்மொழிவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான செயற்பாடுகள் கடந்த டிசம்பர் 29ஆம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவிலும் இரண்டாம் கட்டச் சந்திப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய முன்னணியினரும் பங்கேற்றிருந்தனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த இரண்டு சந்திப்புக்களிலும் பங்கெடுக்கவில்லை. ஆனால், அவரது சார்பில் கிளிநொச்சி கூட்டத்தில் பங்கேற்றிருந்த க.அருந்தவபாலன் வவுனியாக் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

அக்கூட்டணியைச் சேர்ந்த பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கமும் வவுனியா கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அக்கூட்டத்தின்போது, ஜெனிவாவில் இலங்கை மீதான புதிய பிரேரணை தொடர்பில் பல்வேறு கருத்தாடல்களும் கட்சிகளின் நிலைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதில் பூரணமான இணக்கம் இன்னும் ஏற்படாத நிலையில் கொழும்பில் அரசியல் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.

விசேடமாக இந்த சந்திப்பு கஜேந்திரகுமாருக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறினார்.

Tags: ஜெனீவா விவகாரம்
Continue Reading

மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியத்தவறிய 550 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தின் பூஜாபிட்டிய பகுதியிலுள்ள பமுனுகம மற்றும் திவனாவத்த ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பொலிஸ் பிரிவின் மொரகல்ல பகுதி உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய, அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை 1, ஒலுவில் 2, அட்டாளைச்சேனை 8 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று 8ன் கீழ் 1, 8ன் கீழ் 3 மற்றும் அக்கரைப்பற்று 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம், அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கறைப்பற்று 05ஆம் மற்றும் 14ஆம் இலக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நகர அதிகாரத்திற்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அபே ஜனபலய’ கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரதன தேரர், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ‘அபே ஜனபலய’ கட்சி நாடு பூராகவும் மொத்தமாக 67,758 வாக்குகளை பெற்று தேசியப் பட்டியல் ஆசனமொன்றை பெற்றுக்கொண்டது.

அந்த ஆசனத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக கட்சிக்குள் நிலவிய குழப்ப நிலைமை காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக யாருடைய பெயரும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

கடந்த வாரத்தில் கட்சிக்குள் அத்துரலியே ரதன தேரரை நியமிக்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட நிலையில், அவரின் பெயரை தேசியப் பட்டியல் உறுப்பினராக தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டது.

இதனையடுத்து இன்றைய தினத்தில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன், எதிர்க்கட்சி பக்கத்தில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.

அத்துரலியே ரதன தேரர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்ததுடன், பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீன எம்.பியாக பாராளுமன்றத்தில் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Page 5 of 614
© 2019 Asian Mirror (pvt) LTD