web log free
July 04, 2020
editor

editor

இன்று கூடும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் சபாநாயகரின் தலைமையில் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இதன்போது தேர்தல் நடத்தப்படும் முறைமை உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன், தேர்தல் தாமதமாவதற்கான காரணம், தேர்தலை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் என்பன குறித்தும் இதன்போது பேசப்படும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகைத்தரும் மற்றும் அங்கிருந்து செல்லும் ரயில் சேவைகள் தாமதமடைந்ததாக ரயில் கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

சமிக்ஞை கோளாறு காரணமாக இந்தநிலை ஏற்பட்டதாக, ரயில் கட்டுபாட்டு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கை இன்று மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து இதுவரை 320 வரையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஆறு தெரிவு செய்யப்பட்ட எலும்புக் கூடுகளின் மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு கார்பன் அறிக்கை பெறப்பட்டுள்ளது.

கார்பன் அறிக்கை துல்லியமாக ஒரு ஆண்டை குறிப்பிட்டதாக இருக்காது என்றும், பத்தாண்டுகளுக்குட்பட்ட கால அளவையே அது உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வு அறிக்கையை சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச இன்று மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

புல்வாமா தாக்குதலை அடுத்து காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யும் தேயிலைகள் விரைவில் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீரில் பிப்ரவரி 14 ஆம் திகதியன்று ஜெய்ஸ் இ முகமது ஏன்ற பயங்கரவாத அமைப்பால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் 41 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.

இதையடுத்து, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதோடு, பாகிஸ்தானுக்கு 23 ஆண்டுகளாக வழங்கப்பட்ட வர்த்தகத்திற்கு உகந்த நாடு என்ற அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

எனவே, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இம்முடிவால் பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3,500 கோடி அளவில் வர்த்தகப் பாதிப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேப்போல இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் தேயிலையும் இனி நிறுத்தப்படும் என தெரிகிறது.

இதுவரைப் பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

காலி - ரத்கம பகுதியில் வியாபாரிகள் இருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தங்காலை - கால்டன இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

1989ஆம் ஆண்டு மற்றும் 1990ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களைப் போலவே இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முச்சக்கரவண்டி விபத்தில் தாய் மற்றும் குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு - வெல்லவாய பிரதான வீதியின் தங்காலை சீனிமோதர பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி மற்றும் லொறி என்பன மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் தங்காலை வைத்தியசாலையில் அனிமதிக்கப்பட்டநிலையில், தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

லுணுகம்வெஹர பகுதியை சேர்ந்த 37 வயதுடைய தாயும் 3 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பாவனையில் உள்ள சகல இயந்திரவாள்களையும் (Chainsaw Machines) பதிவுசெய்யும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகி 28ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அரசாங்க அரசு சார்பு தனியார்துறை நிறுவனங்கள் அல்லது தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தப்படும் சகல இயந்திர வாள்களும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துசென்று அதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கை முன்னோடியாகத் திகழ்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

காலி - நுகதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது இது நாட்டிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன வங்கியிடம் இருந்து கோரப்பட்ட கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பிணைமுறி சந்தையில் 2 பில்லியன் டொலர்களை திரட்டும் திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர், புதிய பிணைமுறிகளைக் கோரி, மத்திய வங்கி மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பை வெளியிடவுள்ளது.

அரசாங்கம் கடன்களை திருப்பி செலுத்துவதில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த ஆண்டில் 5.9 பில்லியன் டொலரை திருப்பிச் செலுத்த வேண்டும்.

இதில், 2.6 பில்லியன் டொலர், முதல் காலாண்டுக்குள் செலுத்த வேண்டியவையாகும். ஏற்கனவே வைப்பில் இருந்த 1 பில்லியன் டொலரை அரசாங்கம் வெளிநாட்டுக் கடனுக்காக திருப்பிச் செலுத்தியுள்ளது.

இந்த நிலையில், சீன வங்கியிடம் 300 மில்லியன் டொலர் கடன் கோரப்பட்டது. எனினும், சீன புத்தாண்டு விடுமுறைகளால் இந்த கடனுக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் குறித்த நீண்ட பேச்சுக்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடன் ஜனவரி மாத கடைசியில் இறுதி செய்யப்படும் என்றும், இன்னொரு 700 மில்லியன் டொலர் மார்ச் முடிவுக்குள்ளும் இறுதி செய்யப்படும் என்றும் முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

இவற்றில் ஏற்பட்டுள்ள தாமதங்களை அடுத்து, அரசாங்கம், 1 பில்லியன் டொலருக்கான பிணைப் பத்திரங்களை வெளியிட்டும், 1 பில்லியன் டொலருக்கான பான்டா மற்றும் சாமுராய் பிணைமுறிகளின் மூலமும் 2 பில்லியன் டொலரைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சீன வங்கியுடன் மீண்டும் பேச்சுக்களை பெப்ரவரி 20ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் மத்திய வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 


4 கோடி ரூபாய் சுங்க வரியை மோசடி செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுங்க திணைக்களத்தைச் சேர்ந்த இருவர் கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைக்கான சுங்க வரியை மோசடி செய்தனர் என்ற, சுங்க அதிகாரி மற்றும் சுங்க பரிசோதகர் ஆகிய இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேற்படி விவகாரம் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் லோஷனா அபேவிக்ரவின் முன்னிலையில், நேற்று (18) அறிக்கையிடப்பட்டதை அடுத்தே, அவ்விருவருக்கும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

© 2019 Asian Mirror (pvt) LTD