Print this page

“கொரோனா பாதிப்பால் மாற்றம் இருக்காது”

கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதார் 2 படத்தின் வெளியீட்டில் மாற்றம் இருக்காது என இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் கூறியுள்ளார்.

2009-ம் ஆண்டு வெளிவந்த படம் அவதார். ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், உலகளவில் 2.78 பில்லியன் டாலர் (ரூ. 19,282 கோடி) வசூலை அள்ளி மிகப்பெரிய சாதனை செய்தது.

அவதார் படம் மேலும் 4 பாகங்களாக வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் 2016-ல் அறிவித்தார்.

நான் காணும் கலை என்பது, துல்லியமான கற்பனை உலகம். முதல் பாகத்தை விடவும் சிறப்பாக அமையும். மிகச்சிறந்த காவியமாக உருவாகும். 3டி படமாக உருவாக்கப்படும் அவதார் 2 மற்றும் அதன் இதர பாகங்களை 3டி கண்ணாடியின்றிப் பார்க்கமுடியும் என்று கூறினார்.

டெர்மினேட்டர் படத்தின் இரு பாகங்கள், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற படங்கள் மூலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை முன்னெடுத்த ஜேம்ஸ் கேம்ரூன், 3டி கண்ணாடியின்றி 3டி படம் பார்க்கமுடியும் என்று அறிவித்தது திரையுலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அவதார் 2 படத்தின் படப்பிடிப்பை 2017-ம் வருடம் செப்டம்பர் மாதம் ஆரம்பித்தார் ஜேம்ஸ் கேம்ரூன். சேம் வொர்திங்டன், ஸோ சல்டானா, வீவர் போன்றோர் இப்படங்களில் நடிக்கிறார்கள்.

அவதார் படத்தின் 2-ம் பாகம், 2020, டிசம்பர் 18 அன்றும் அடுத்த மூன்று பாகங்கள் டிசம்பர் 17, 2021, டிசம்பர் 20, 2024, டிசம்பர் 19, 2025 ஆகிய நாள்களிலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவதார் படங்களின் வெளியீடுகள் தள்ளிவைக்கப்பட்டன.

அவதார் 2 படம் டிசம்பர் 17, 2021 அன்று வெளியாகும் எனக் கடந்த வருடம் மே மாதம், டிஸ்னி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதேபோல அவதார் 3,  அவதார் 4, அவதார் 5 படங்களும் 2023, 2025, 2027 ஆகிய வருடங்களில் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அவதார் 2 படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம் இருக்குமா என்கிற கேள்விக்கு இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் பதில் அளித்துள்ளார்.

ஒரு பேட்டியில் கேம்ரூன் கூறியதாவது: அவதார் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு முன்பு நியூஸிலாந்தில் படமாக்க இருந்தேன். இப்போது அந்தப் படப்பிடிப்பை விரைவாகத் தொடங்கும் ஆர்வத்தில் உள்ளோம்.

கொரோனா தடுப்புப் பணிகளை நியூசிலாந்து அரசு சிறப்பாகச் செய்து வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வருவது மட்டுமல்லாமல் முழுவதுமாக அழிக்கவும் போராடி வருகிறது. இதனால் எங்களுடைய படப்பிடிப்பு தொடங்க சிறிது மாதங்கள் ஆகலாம். ஆனால் நிச்சயம் விரைவில் தொடங்கிவிடுவோம். திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்துவிடுவோம். தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் வீட்டினுள் இருந்து அவதார் 2 பணிகளைப் படக்குழுவினர் செய்து வருகிறார்கள் என்றார்.

Last modified on Monday, 18 May 2020 21:29