Print this page

பெண்களுக்கான இறுதியில் இந்தியா ஆஸி களத்தில்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் ஏழாவது இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா, நடப்புச் சம்பியன்கள் அவுஸ்திரேலியா ஆகியன தகுதிபெற்றுள்ளன.

சிட்னியில் இன்று மழை காரணமாக இந்தியா, இங்கிலாதுக்கிடையேயான முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறாத நிலையில் குழுநிலையில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் என குழு ஏயின் வெற்றியாளர்களாக இங்கிலாந்தை விட குழுநிலையில் மேம்பட்ட பெறுபேறுகளைப் பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

தமது குழுநிலைப் போட்டிகளில் தாய்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகளை இங்கிலாந்து வென்றிருந்தபோதும் தென்னாபிரிக்காவிடம் தோல்வியடைந்த நிலையில் குழு பியிலிருந்து இரண்டாவது அணியாகவே அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தெரிவாகியிருந்தது.

இந்நிலையில், சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை வென்று இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா, நடினே டி கிளேர்க், நொன்குலுலெக்கோ மலபா, அயபொங்கா காகாவிடம் விக்கெட்டுகளை குறிப்பிட்ட இடைவேளைகளில் பறிகொடுத்தபோதும் தமது அணித்தலைவி மக் லன்னிங்கின் ஆட்டமிழக்காத 49 (49), பெத் மூனியின் 28 (24), அலைஸா ஹீலியின் 18 (13), றேச்சல் ஹெய்ன்ஸின் 17 (18) ஓட்டங்கள் கைகொடுக்க 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

இனிங்ஸ் முடிவில் மழை பெய்த நிலையில் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறைப்படி 13 ஓவர்களில் 98 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா சார்பாக லோரா வொல்வார்ட் ஆட்டமிழக்காமல் 41 (27), சுனே லுஸ் 21 (22) ஓட்டங்களைப் பெற்றபோதும், சோபி மொலினெக்ஸ், மேகன் ஸ்கட், டெலிஸ்ஸா கிம்மின்ஸிடம் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 92 ஓட்டங்களையே பெற்று ஐந்து ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகியாக மெக் லன்னிங் தெரிவானார்.

அந்தவகையில், மெல்பேணில் இலங்கை நேரப்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளவுள்ளது.

 

Last modified on Thursday, 05 March 2020 15:22