Print this page

நடுவரின் தவறான நோபோல் அறிவிப்பால் கடும் சர்ச்சை

December 24, 2018

பங்களாதேஷ் மேற்கிந்திய தீவுகள் அணிகளிற்கு இடையில் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் நடுவர் தவறுதலாக தொடர்ச்சியாக நோபோல் என தெரிவித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேசில் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் வெற்றியிலக்காக 191 ஓட்டங்களை பெறுவதற்காக பங்களாதேஷ் அணி ஆடியபோதே இந்த தவறுகள் இடம்பெற்றுள்ளன.
நான்காவது ஓவரை ஒசேன் தோமஸ் வீசியவேளை சில பந்துகளை நோபோல் என நடுவர் அறிவித்தார். எனினும் ரீ பிளேகளின் போது அந்த பந்துகள் நோபோல் இல்லை என்பது தெரியவந்தது.
லிட்டன் தாஸ் அடித்த பந்தினை மேற்கிந்திய வீரர்கள் பிடித்த வேளை நடுவர் நோபோல் என அறிவித்தார்.


எனினும், மைதானத்தில் காணப்பட்ட திரையில் அது நோபோல் இல்லை என்பது தெரியவந்ததை தொடர்ந்து மேற்கிந்திய அணியின் வீரர்கள் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு நடுவரை கேட்டுக்கொண்டனர்.
இதன்போது மேற்கிந்திய அணிவீரர்களுக்கும் நடுவர்கள் அதிகாரிகள் மத்தியில் கடும் வாக்குவாதங்களும் இடம்பெற்றன.


இதன்பின்னர் மூன்றாவது நடுவரிடம் தீர்ப்பு குறித்து வினவப்பட்டதை தொடர்ந்து அவர் அது ஆட்டமிழப்பு என அறிவித்தார்.


எனினும், நான்காவது நடுவரும் ஆட்ட மத்தியஸ்தர் ஜெவ்குரோவும் மேற்கிந்திய அணித்தலைவர் அணிமுகாமையாளர் பங்களாதேஷ் அணித்தலைவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தபின்னர் லிட்டன் தாஸ் ஆட்டமிழக்கவில்லை அது பிரீ ஹிட் என அறிவிக்கப்பட்டது.
களத்தில் நின்ற நடுவர் நோபோல் என அறிவித்ததால் அதனை மறு ஆய்வு செய்ய முடியாது என்பதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என மூன்றாவது நடுவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் ஆட்டம் ஆரம்பமானவேளை பிரீ ஹிட்டை பயன்படுத்தி பங்களாதேஷ் வீரர் சிக்சர் அடித்தார்.


இதேவேளை இந்த ஓவரின் நான்காவது பந்திலும் நடுவர் டன்வீர் அகமட் தவறுதலாக நோபோல் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது
கடும் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இந்த போட்டியில் மேற்கிந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது.

Last modified on Thursday, 27 December 2018 09:31