web log free
May 08, 2021

பங்காளிக்கட்சிகள் அரசை ஒருபோதும் வீழ்த்தாது: சித்தார்த்தன் எம்.பி

தற்போதைய அரசாங்கத்தினை வீழ்த்துகின்ற நிலையில் அதன் பங்காளிகட்சிகள் இருக்கும் என்று நான் நம்பவில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்....

இந்திய மீனவர் விடயத்தில் கட்டணம் அறவிட்டு அதனை

எமது மீனவர்களுக்கு வழங்கலாம் என  கடற்தொழில் அமைச்சர் சொல்லியிருக்கின்றார். அது எமது மீனவர்களை பாதிக்கும் ஒரு விடயமே. அதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்கின்றது. எனினும், அதனை ஒரு சிந்தனையாக சொல்லியிருப்பதாகவும் திட்டமாக சொல்லவில்லை என்று கடற்தொழில் அமைச்சர் கூறியிருக்கின்றார். 

குறிப்பாக, மீன்பிடிதொழிலில் ஈடுபடும் இந்திய முதலாளிகள் எவ்வளவு பணத்தினை வழங்கியும் அந்த அனுமதியினை பெறுவார்கள். இதனால், ஏழை கடற்தொழிலாளர்கள் நன்மையடையமாட்டார்கள். எனவே, அந்த விடயத்தினை அமைச்சர் மறுதரம் சிந்திப்பது நல்லவிடயம். அந்த விடயத்தில் அவர் அக்கறை கொண்டுள்ளதால் அந்த. சிந்தனையை நடைமுறைப்படுத்துவார் என்று நம்பவில்லை. வாழ்வாதாரம் என்பது தொப்புள்கொடி மற்றும் தமிழ் உணர்வுகளிற்கு அப்பாற்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை  கடற்தொழிலில் அதிகம் ஈடுபடுபவர்கள் பெரிய முதலாளிகளின் கீழே வேலை செய்யும் தொழிலாளிகளாக இருக்கின்றனர். அவர்களிற்கு அந்த தொழிலே மூலாதாரமாகவுள்ளது. யாராக இருந்தாலும் தமது வாழ்வாதாரத்தினை பார்க்கவே முயற்சிசெய்வர். எனவே அந்தவிடயத்தினை விரைவில் பேசித் தீர்ப்பதன் மூலம் அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். 

தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளிற்கு எதிராக தொடர்சியாக நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம். இந்த அரசில் அந்த அழுத்தங்கள் கூடுவதற்கான வாய்ப்புக்கள் தான் அதிகம் இருக்கின்றது. சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அப்படி செய்யப்படுகின்றது. 

பெரும்பாண்மை சிங்கள மக்கள் அப்படியான மனப்போக்கில் இருப்பவர்கள் அல்ல, எனினும், அரசியல்வாதிகள் தூண்டும் போது அதனை அவர்கள் கடைப்பிடித்து வாக்களிப்பார்கள். கடந்த காலங்களில் சிங்கள கடும்போக்காளர்களாக இருந்த பலர் அரசியலில் படுதோல்வியடைந்திருக்கின்றார்கள். எனவே, இந்த அரசு இதனையே நம்பியிருந்தால் பெரும் பின்னடைவு மிகவிரைவில் வரும். 

அரசுக்குள் சில குழப்பங்கள் ஏற்ப்பட்டிருந்தாலும்,  உடனடியாக அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை. அதில் ஒரு பலவீனமான நிலையை ஏற்படுத்தலாமே தவிர, அரசை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளிகட்சிகள் இருக்கும் என்று நான் நம்பவில்லை. எனினும், ஒரு பலவீனத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது என்றார்.

 

© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd