Print this page

நாட்டின் மிகப்பெரிய கேமிங் சமூகத்துடன் சிங்கர் கைகோர்க்கிறது

சைபர் திறனை உலகத் தரத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நாட்டின் மாபெரும் கேமிங் சமூகத்துடன் சிங்கர் கைகோர்ப்பு

இலங்கையின் மாபெரும் கேமிங் சமூகமான Maximum Esports உடன் சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி அண்மையில் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தது. அதன் மூலம், இலங்கையின் கேமிங் துறையின் ஒட்டு மொத்த நியமங்களை மேம்படுத்தி திறன் விருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரதான அனுசரணையை வழங்க முன்வந்துள்ளது. போட்டிகரமான, ஒழுங்கமைக்கப்பட்ட வீடியோ கேமிங் துறையில் இலங்கையின் வளர்ந்து வரும் கேமிங் சமூகத்தின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் வகையில் சிங்கரின் இந்த அனுசரணை அமைந்துள்ளது.

சிங்கர் Esports Premier League நிகழ்வுக்கு அண்மையில் சிங்கர் அனுசரணை வழங்கியிருந்தது. இந்தப் போட்டியில் 12 இளம் அணிகள் ஒரு மில்லியன் ரூபாய் பரிசுக்காக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேசிய ஒலிம்பிக் சம்மேளனம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சினால் இலங்கையின் உத்தியோகபூர்வ விளையாட்டுக்களில் ஒன்றாக esports பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், 2022 ஆசிய கேம்ஸ் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு சிங்கரின் அனுசரணை அதியுயர் பங்களிப்பை வழங்குவதாக அமைந்திருக்கும். இந்தப் போட்டிகளில் எட்டாவது பதக்கப் பிரிவு போட்டியாக esports அறிமுகம் செய்யப்படும்.

சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷனில் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “Maximum Esports உடன் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதையிட்டு சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி பெருமை கொள்கின்றது. உள்நாட்டு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கிரிக்கட், ரக்பி மற்றும் இதர விளையாட்டுக்களைச் சேர்ந்த வீரர்களுக்கு வலுவூட்டி அனுசரணை வழங்குவதில் சிங்கர் முன்னணியில் திகழும் நிலையில், மெய்நிகர் விளையாட்டு உலகில் எமது உத்தியோகபூர்வ அனுசரணை பிரவேசத்தை முன்னெடுப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையின் இளைஞர்களுடனான எமது புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தை வலிமைப்படுத்தும் வகையில் இந்த பங்காண்மை தொடர்ந்தும் அமைந்திருப்பதுடன், நுகர்வோர்களின் தேவைகளை உணர்ந்து செயலாற்றும் முன்னோடியான வர்த்தக நாமமாக அமைந்திருப்பதுடன், அவ்வாறான ஊக்குவிப்புகளினூடாக எமது வர்த்தக நாம சன்னாமத்தை பேணி முன்னெடுத்துச் செல்லக்கூடியதாகவும் உள்ளது. SLIM மக்கள் அபிமான விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது 2021 ஆம் ஆண்டுக்கான இளைஞர்கள் தெரிவுக்குரிய வர்த்தக நாமமாக சிங்கர் தெரிவு செய்யப்பட்டிருந்தமையினூடாக எமது முயற்சிகளுக்கு அவர்கள் வழங்கும் ஆதரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான பங்காண்மைகளை தொடர்ந்தும் ஊக்குவித்து மேம்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

Maximum E-Sports என்பது இலங்கையின் பன் விளையாட்டு esports சமூகம் அல்லது அமைப்பாக 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டிருந்தது. இதனூடாக சகல வயதையும் சேர்ந்த கேமர்களுக்கு நிபுணத்துவ நிலையில் போட்டியிடக்கூடிய சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த அனுபவம் வாய்ந்த கேமர்களுக்கு அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து பயில்வதற்கான சிறந்த வாய்ப்பையும் இது உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பில் தற்போது சுமார் 6000 அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர். அணியாக இவர்கள் கேமிங் விளையாட்டுகளில் பங்கேற்பதுடன், பெருமளவு வெற்றிகளையும் பதிவு செய்துள்ளனர்.

Maximum Esports ஸ்தாபகரும் இணை உரிமையாளருமான ஷிஹான் மொராயஸ் கருத்துத் தெரிவிக்கையில், “அடுத்த ஆண்டில் சிங்கர் ஸ்ரீ லங்காவின் அனுசரணையில் esports களில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். உலகளாவிய ரீதியில் esports பிரபல்யமடைந்து வருகின்றது. பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் esports ஐயும் உத்தியோகபூர்வ பதக்கத்துக்கான விளையாட்டாக பிரகடனம் செய்து வரும் நிலையில், உள்நாட்டில் எமது திறமைகளை மேம்படுத்தி, சர்வதேச மட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கக்கூடியதாக இருக்கும். எமது திறமைகளை ஊக்குவிக்க சிங்கர் எம்முடன் கைகோர்த்துள்ளமைக்காக நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்றார்.

உலகளாவிய ரீதியில் கேமிங் துறை என்பது வேகமாக வளர்ந்து வருவதுடன், 2021 ஆம் ஆண்டில் 180 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய தொற்றுப் பரவலுடனான சூழலில், இந்த விளையாட்டுகளில் பங்கேற்பும் ஈடுபாடும் அதிகரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் இரண்டு பில்லியனுக்கு அதிகமான கேமர்கள் காணப்படும் நிலையில், உலகின் மொத்த சனத்தொகையில் 25 சதவீதத்துக்கு அதிகமானதாக அது அமைந்துள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அதிகளவு விளையாட்டு வீரர்கள் காணப்படுகின்றதுடன், அதிகளவு வருமானத்தை ஏற்படுத்தும் பிராந்தியமாகவும் அமைந்துள்ளது.

சிங்கரின் வளர்ந்து வரும் கேமிங் தயாரிப்புகளை Maximum Esports உடனான பங்காண்மையினூடாக ஊக்குவிப்பதற்கு சிங்கர் ஸ்ரீ லங்கா நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சிங்கரின் தெரிவுகளில் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற தொழில்நுட்ப வர்த்தக நாமங்களான Dell, Asus, Alienware, MSI மற்றும் பல சன்னாமங்கள் காணப்படுகின்றன. இவற்றினூடாக இலங்கையில் esports ஐ பரவலடையச் செய்யக்கூடியதாக இருக்கும்.