web log free
March 29, 2024

இலங்கை - பாகிஸ்தான் முதல் ரி20 இன்று

இலங்கை–பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரின் முதல் போட்டி இன்று 5ம் திகதி லாஹூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளதுடன், தொடரை பாகிஸ்தான் அணி 2–0 என கைப்பற்றியுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றிருந்த போதும், அனுபவமற்ற இளம் இலங்கை அணி சிறந்த போட்டித் தன்மையுடன் விளையாடியிருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் செஹான் ஜயசூரிய, தசுன் ஷானக ஆகியோரது துடுப்பாட்ட இணைப்பாட்டம் மற்றும் இரண்டாவது போட்டியில் அறிமுக வீரர் மினோத் பானுக மற்றும் தனுஷ்க குணதிலக்க உட்பட இலங்கை அணியின் துடுப்பாட்டம் நம்பிக்கை தரக்கூடிய அம்சமாக அமைந்திருந்தது

இரண்டு அணிகளையும் பொறுத்தவரை ஒருநாள் அணியிலிருந்து பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. ஒருநாள் போட்டிகளுக்கான அணித் தலைவர் லஹிரு திரிமான்ன 20 க்கு 20 அணியில் இணைக்கப்படாத நிலையில், இலங்கை ரி20 அணியின் தலைவராக தசுன் ஷானக செயற்படவுள்ளார். ஒருநாள் தொடரில் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இவர், ரி20 போட்டிகளில் இலங்கை அணியை சிறந்த முறையில் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்துள்ள போதும், 20க்கு20 போட்டிகளில் சிறப்பாக செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூரில் நடைபெற்ற ரி20 தொடர்களில் மிகச்சிறப்பாக பிரகாசித்திருந்த வீரர்களே இந்த ரி20 அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களால், ஒருநாள் போட்டிகளையும் விட, ரி20 போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணியை விட பலமான அணியாக உள்ளது. அதுமாத்திரமின்றி 20க்கு20 தரவரிசையில், முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடரானது அதிகமான சவாலை கொடுக்க வாய்ப்பில்லை.

பாகிஸ்தான் ரி20 அணியில், ஒருநாள் குழாத்திலிருந்து மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், நீண்ட நாட்களுக்கு பின்னர், உமர் அக்மல் மற்றும் அஹமட் சேஷாட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வருகை பாகிஸ்தான் அணியை மேலும் வலுவுடையதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமாத்திரமின்றி, பாகிஸ்தான் அணி தங்களுடைய சொந்த இரசிகர்களுக்கு முன்னாள் முழுமையான தொடர் கொண்ட 20க்கு20 போட்டியில் விளையாடுவது அந்த அணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாகவும் அமையும்.