web log free
March 29, 2024

வெறும் கையுடன் வீட்டுக்கு திரும்பும் இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி-20 போட்டியிலும் தென்னாபிரிக்க அணி, 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி-20 தொடரை 3-0 என தென்னாபிரிக்க அணி முழுமையாக கைப்பற்றியது.

தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கை அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இலங்கை அணி வரலாறு படைத்து சாதித்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 5-0 என கைப்பற்றியது.

டி-20 தொடர்:

இந்நிலையில் இரு அணிகளும் டி-20 தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியிலும் தென்னாபிரிக்க அணி வென்றது. இந்தநிலையில் இரு அணிகள் மோதிய கடைசி டி-20 போட்டி ஜோகானஸ்பர்க்கில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பிரெட்டோரியஸ் அபாரம்:

இதையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப வீரர் மார்க்ராம் (15) ஏமாற்றினார். பின் வந்த ஹென்ரிக்ஸ் (66), பிரெட்டோரியஸ் (77) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுத்தனர். கடைசி நேரத்தில் டுமினி (34*) ஓரளவு கைகொடுக்க தென்னாபிரிக்க அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 198 ஓட்டங்கள் எடுத்தது.

சொதப்பல் ‘துடுப்பாட்டம்’:

கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு டிக்வெல்ல (38), தனஞ்சய (8), பெர்னாண்டோ (1), மெண்டிஸ் (1), பெரேரா (15), திசர (8) என யாரும் நிலைக்கவில்லை. இந்நிலையில் இலங்கை அணி 11.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 111 ஓட்டங்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால், போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை அணி, 15.4 ஓவரில் 137 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் மூலம் டி.எல்.எஸ்., முறைப்படி தென்னாபிரிக்க அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 3-0 என டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றியது.