web log free
May 08, 2021
editor

editor

தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோர் காவல்த்துறையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்

நேற்று (07)மட்டும் இலங்கை முழுவதிலும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 617 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இது வரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்களில் அதிகமானோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளிகளை பேணாமை உள்ளிட்ட கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.

 

கிளிநொச்சி மாவட்டத்தில்  230 கட்டில்களுடன்  புதிதாக கொரோனா சிகிச்சை நிலையம் நேற்று(07) முதல் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, வடமாகாணத்திற்கான தொற்று நோய் மருத்துவமனையான கிருஸ்ணபுரம் வைத்தியசாலை செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு மேலதிகமாக கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் இதுவரைகாலமும் இராணுவ வைத்தியசாலையாக இயங்கி வந்த நிலையம் தற்போது கொரோனா சிகிச்சைநிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

அவ் வைத்திசாலையினை கிளிநொச்சி மாவட்ட படைமுகாம்களின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கஜேந்திர ரணசிங்க மற்றும்  கிளிநொச்சி மாவட்ட  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் ஆகியோர்கள் வைத்திசாலையின் நிலைமைகளை பார்வையிட்டனர்.

இது கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை  மாவட்டத்தின்  கப்பல்துறை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம்(06) இரவு பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

கிண்ணியா பகுதியிலிருந்து கப்பல்துறைக்கு சென்ற சிலர், அங்கிரந்த சிலருடன் நள்ளிரவு ஒரு மணியளவில் மோதலில் ஈடுபட்டதாகவும், இதன்போது, 20 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 04 பேரில் மூன்று இளைஞர்களும் 60 வயதான முதியவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. சீனக்குடா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மாகாணசபைத் தேர்தல் புதிய முறைமை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான  ஜீவன் தொண்டமான்  தெரிவித்துள்ளார்.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தாக அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொகுதிவாரியான தேர்தல் முறைமையில் தமிழ் பிரதிநிதிகள் எவ்வாறு தமது மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது மற்றும் பாதுகாப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக விரிவான கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் மூலம் படைவீரர்களுக்கு உரித்தான நிவாரணங்கள் ஏப்ரல் 27 முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தின் காரணமாக  இறந்த, அங்கவீனமுற்ற  படை வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம் உரித்தான நிவாரணங்களை 2021 ஏப்ரல்  மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து இன மக்களுக்கும் சுதந்திரமானதொரு தேசத்தை பெற்றுக்கொடுப்பதற்காக படைவீரர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்து ஊனமுற்றனர். எனவே, அவர்களுக்கு வழங்க முடியுமான அனைத்து வசதிகளையும் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்று “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைப் பிரகடனத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் படை வீரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏழு திட்டங்களுடன் ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அமைச்சரவை விஞ்ஞாபனங்களுக்கு ஏப்ரல் 27 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

முன்மொழியப்பட்ட நிவாரணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட திகதியிலிருந்து அதனை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி,

  1. பயங்கரவாதத்தின் காரணமாக இறந்த திருமணமான முப்படையினர் / பொலிஸ் உறுப்பினர்களின் விதவைகளுக்கு, இறந்த உறுப்பினரின் 55 வயது நிறைவடைந்த திகதிக்கு உரித்தாகும் மொத்த ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளை எவ்வித மாற்றமுமின்றி விதவைகள் உயிருடன் இருக்கும் வரை செலுத்துதல்.
  2. பயங்கரவாத செயல்களால் இறந்த திருமணமான / திருமணமாகாத முப்படைகள் / பொலிஸ் உறுப்பினர்களின் பெற்றோருக்கு பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை, இறந்த உறுப்பினரின் 55 வயது நிறைவடைந்த திகதியிலிருந்து மாதந்தோறும் ரூ .25,000 கொடுப்பனவை வழங்குதல்.
  3. பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக ஊனமுற்று சேவையில் இருந்து நீங்கிய முப்படைகள் / பொலிஸ் உறுப்பினர்களுக்கு இதுவரையில் உயிருடன் உள்ள வரை வழங்கப்படும் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் இறக்கும் போது அவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு செலுத்துதல்.
  4. பயங்கரவாத நடவடிக்கைகள் அல்லாத வேறு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டிருந்த போது ஊனமுற்ற முப்படைகள் / பொலிஸ் உறுப்பினர்களுக்கும் இறந்த உறுப்பினர்களின் தங்கிவாழ்வோருக்கும் குறித்த சம்பவங்கள் குறித்து ஒரு குழுவின் மூலம் ஆராயப்பட்டு, அவர்களுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் 55 வயது பூர்த்தியான திகதியிலிருந்து உரித்தாகும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் எவ்வித மாற்றமும் இன்றி வழங்கப்படும்.
  5. போர் நிலைமைகளின் விளைவாக போருக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் (வெடிபொருட்களை அகற்றுதல்) ஈடுபடும் போது அங்கவீனமுற்ற / இறந்த ஊனமுற்ற முப்படைகள் / பொலிஸ் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் குறித்து ஒரு குழுவின் மூலம் ஆராயப்பட்டு, அவர்களுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் 55 வயது பூர்த்தியான திகதியிலிருந்து உரித்தாகும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் எவ்வித மாற்றமும் இன்றி வழங்கப்படும்.
  6. பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக ஊனமுற்று சேவையில் இருந்து நீங்கிய முப்படைகள் / பொலிஸ் உறுப்பினர்கள் 55 வயதை எட்டுவதற்கு முன்பு இறந்துவிட்டால், அவர்கள் 55 வயது வரை உயிருடன் இருந்தவர்களாக கருதி அது வரை அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அவர்களின் தங்கி வாழ்வோருக்கு வழங்கப்படும்.
  7. பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அங்கவீனமுற்று அதனால் ஏற்பட்ட மனநல பிரச்சினைகளின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட ஒரு உறுப்பினருக்கு (55 வயது வரை) உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் சார்ந்தவர்களுக்கு வழங்குதல்.

 

 

நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை, சென்கூமஸ் கிராம சேவகர் பிரிவு இன்று (07) முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது  என லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன், அப்பகுதியில் உள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய ஊழியர்களுக்கும், சென்கூமஸ் தோட்டத் தொழிலாளர்கள் 40 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், சுமார் 30 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தனிமைப்படுத்தல் விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி தோட்டப்பகுதியில் உள்ள நபரொருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் சிலருக்கு வைரஸ் தொற்று இருந்துள்ளது. இதனையடுத்தே பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையிலேயே தேயிலை ஆராய்ச்சி நிலைய ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை, இவ்விரு பகுதிகளுக்கும் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியின் கீழ் உள்ள கொழும்பு - மஹரகம மாநகர சபை கூட்டத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஆண் உறுப்பினரை பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகர சபை கூட்டத்தினிடையே ஏற்பட்ட தொலைபேசி காணொளி சர்ச்சையை அடுத்து ஆண் உறுப்பினரை சம்பந்தப்பட்ட பெண் உறுப்பினர் கைகளை நீட்டி தாக்கிய சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கொழும்பின் புறநகராகிய மஹரகம மாநகர சபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கின்றது.

மாநகர சபை நேற்றைய தினம் கூடியபோது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் சாவித்திரி குணசேகரவுக்கும், அதே கட்சியைச் சேர்ந்த நிஷாந்த விமலசந்திரவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பெண் உறுப்பினரது கையடக்கத் தொலைபேசியிலிருந்த காணொளி ஒன்றினால் இந்த வாக்குவாதம் ஏற்பட ஆரம்பித்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருந்த போதிலும், இவ்விரு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் இடையே திடீரென பெண் உறுப்பினரது கையடக்கத் தொலைபேசி காணாமல் போனதால் ஆத்திரமடைந்த அவர் திடீரென நிஷாந்த விமலசந்திர மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளார்.

குறித்த இரு உறுப்பினர்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றபோது ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அதேபோல எதிர்கட்சி உறுப்பினர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமை அங்கு செய்தி அறிக்கையிடலுக்காக சென்றிருந்த ஊடகவியலாளர்களின் கமராக்களில் பதிவாகியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தாக்குதலை நடத்திய  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் சாவித்திரி குணசேகர மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்திருக்கின்றார்.

இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், மாநகர சபை  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் சாவித்திரி குணசேகரவை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித் அதே கட்சியைச் சேர்ந்த நிஷாந்த விமலசந்திர அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தை காணொளி மூலம் பதிவுசெய்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினரான நிஷாந்த விமலசந்திர அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியமையே நேற்று இடம்பெற்ற பிரச்சினைக்கு அடிப்படையிலான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியில் மியான்குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் மியான்குளம் சந்தியில் அதிவேகமாக பயணித்ததில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் இருந்து தெரிய வந்துள்ளது.

இதில் மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்க வீதியில் வசிக்கும் பரமேஸ்வரன் தனுஜன் (வயது 31), தெகிவளை ஹோட் வீதியில் வசிக்கும் துரைசிங்கம் வினோகா ஆகிய இருவருமே இந்த வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த விபத்தில் உயிரிழந்துள்ள வினோகா வானொலி அறிவிப்பாளர்களான ரேணுகா மற்றும் மேனகா ஆகியோரின் சகோதரியாவார்.

  

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்வு ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றுள்ளது.

ஸ்டாலின் உடன் 34 அமைச்சர்கள் கொண்ட தமிழக அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. அத்துடன் ஆளுநர் இவர்களனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஸ்டாலின் பதவியேற்கும் போது “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” எனக்கூறி பதவி ஏற்றுக்கொண்டமை எல்லோரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

நுவரெலியா மாவட்டம், கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனன்கம்மன கிராம அலுவலகர் (473) காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகள் இன்று (06) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி பனன்கம்மன கிராம பகுதியில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்னும் சிலருக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

 

Page 1 of 649
© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd