web log free
June 23, 2021
editor

editor

கேகாலை மாவட்டம், எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆறுக்கு நீர் வழங்கும் கந்தலோயா ஆற்றில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் எட்டியாந்தோட்டை கந்தலோயா தோட்ட கீழ் பிரிவைச் சேர்ந்த 39 வயதுடைய சுப்பிரமணியம் நடராஜ் என்ற இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 10ம் திகதி முதல் காணாமல் போய்விட்டதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த ஆணின் மரணம் தொடர்பாக பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ருவான்வெல்ல நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

கோவிட் 19 நிலைமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் மற்றும் செயற்பாடுகள்  தொடர்பில் அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

கோவிட் 19 தொற்றுநோய் நிலைமைகளுடன் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த தொற்றுநோயிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக அவர் அனைத்து தரப்பினருடனும் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறுகளை ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் திரு. கிங்ஸ்லி ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.

500,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இலங்கைக்கு இலவசமாக கிடைக்கப் பெற்றதுடன், மேலும் 500,000 தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்தது. மேலும் 265,000 தடுப்பூசிகள் எமக்குக் கிடைக்கப் பெற்றன. அதன்படி, இலங்கைக்கு 12 லட்சத்து 65,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றன.

முதல் தடுப்பூசி ஏற்றலின் போது, ​​9,25,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இந்தியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலைமை காரணமாக, இரண்டாம் கட்ட தடுப்பூசிகளைப் பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டது.

இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு சுமார் 600,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தேவை என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனைப் பெறுவதற்காக அரசாங்கம் தற்போது பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகிறது.

இதற்கிடையில், இலங்கைக்கு சீனாவிடமிருந்து 600,000 சைனோபார்ம் தடுப்பூசிகள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றன. இதனைப் பயன்படுத்த உலக சுகாதார தாபனத்தின் ஒப்புதல் கிடைத்திருக்கவில்லை

எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக உலக சுகாதார தாபனத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நடத்திய கலந்துரையாடலின் விளைவாக, அன்று மாலையிலேயே உலக சுகாதார தாபனம் “சைனோபார்ம்” தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.

அதன்படி, மறுநாள் 'சைனோபார்ம்' தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 25,000 தடுப்பூசிகள் வீதம் முதலில் மேல் மாகாணத்தில் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனாவிடமிருந்து 03 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுவதற்காக சீன அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளன. அத்தடுப்பூசிகள் கிடைத்தவுடன் ஏனைய மாகாணங்களிலும் தடுப்பூசி  ஏற்றும் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியையும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டத்தில், இலங்கைக்கு 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஸ்புட்னிக் தடுப்பூசி முறையானது பயன்படுத்தப்படும் ஏனைய தடுப்பூசிகளிலிருந்து சற்று வித்தியாசமாக இருப்பதால், எமது சுகாதாரத் துறை புதிய முறைமைகளை பின்பற்றி கொத்தட்டுவ பகுதியில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது.

இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், 85,000 தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கவுள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசியின் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளதைப் போன்று எங்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மூலம் தற்போதைய நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும் என்பதுடன், இலங்கையின் வலுவான சுகாதார அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த சுகாதார பணிக்குழாமினர்  தொடர்பில்  ஜனாதிபதி அவர்கள் பூரண நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

உலக சுகாதார தாபனம் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையின் வலுவான சுகாதார சேவை முறையை பாராட்டியுள்ளது.

இருப்பினும், இந்த எல்லா சூழ்நிலைகளுடனும், கோவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மக்களின் அர்ப்பணிப்பும் மிக முக்கியமானது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இணங்க சுகாதாரத் துறை வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி சமூக இடைவெளியை பேணுதல், மற்றும் தேவையற்ற கூட்டங்களைத் தவிர்ப்பது போன்ற சமூகப் பொறுப்புகளில் அனைத்து பிரஜைகளும் கவனம் செலுத்துவது ஒரு ஆரோக்கியமான தேசத்திற்கு வழிவகுக்கும் என்று ஜனாதிபதி அவர்கள் நம்புகிறார்.

கோவிட் 19 தொற்றுநோயை ஒழிக்க அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் விளைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி வரை,

  • அனைத்து மாகாணங்களுக்கும் இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல்,
  • மக்கள் ஒன்றுகூடும் அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்தல்,
  • வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசித்தல், தங்கியிருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல்;
  • நோய்த்தொற்றாளர்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளை தனிமைப்படுத்துதல்,

போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகளை விதிக்கும் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் நாட்டின் அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியாக பேணப்படும் வகையிலும் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்திட்டங்களுக்கு ஏற்ப நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படுவார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்.

நாட்டை மூன்று வாரம் மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும்  ரூ. 20,000 வழங்குங்கள். இதுவரை, ஆறு நாடுகளில் உள்ள கொரோனா  கிருமிகள் இங்கே வந்து சேர்ந்துள்ளன. ஆகவே இன்று கர்ப்பிணி தாய்மார்களும், பச்சை பாலகர்களும் சாகிறார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஐஎச்எம்ஈ நிறுவனத்தின் இலங்கை பற்றிய ஆய்வில், இப்படியே போனால், இலங்கையில் செப்டம்பர் மாதமளவில் 20,000 பேர் வரை மரணிக்கவும், தினசரி மரணம் 200 ஐ கடக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆகவே, துறைமுக நகருக்கு தரும் முன்னுரிமையை கொரோனா அழிப்புக்கு கொடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தேரர் முருத்தெடுகல ஆனந்த பிக்கு சொல்வதை போன்று, நாட்டில் மக்கள் தெருக்களில் செத்து மடியும் நிலைமை ஏற்படலாம் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மனோ எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த முன்னணி பிக்கு முருத்தெடுகல ஆனந்த தேரர், “நாட்டில் வீதியில் விழுந்து மரணிக்க மட்டுமே மக்களுக்கு இன்று உரிமை உள்ளது” என கூறுகிறார். இந்த அரசை ஆட்சிக்கு கொண்டு வந்ததால் இவரும் இந்நிலைமைக்கு பொறுப்பு கூற வேண்டும். எனினும், இதைவிட இந்த ஆட்சியின் இலட்சணத்துக்கு சான்றிதழ் வேண்டுமா?   

ஆரம்பத்தில் கொரோனாவால், வயதானவர்கள் மட்டுமே சாவார்கள் என கூறப்பட்டது. இன்று கர்ப்பிணிகள் சாகிறார்கள். குழந்தைகள் சாகிறார்கள். ஏனென்றால், இன்று நாட்டில் உள்ள கொரோனா கிருமியின் வீரியம் அதிகரித்து விட்டது.

இன்று எம் நாட்டில் சீனா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, டென்மார்க், இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வளர்ச்சியடைந்த கொரோனா கிருமிகள் உள்ளன. இவை எப்படி இலங்கைக்கு வந்தன? அரசின் கையாள் உதயாங்க வீரதுங்க கூட்டி வந்த  உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள்தான் தம்முடன் இங்கிலாந்து கிருமிகளையும் கொண்டு வந்தார்கள்.  இப்படிதான் எல்லாம் வந்தன. நீங்கள் உரிய வேளையில் விமான நிலையங்களை மூட மறுக்கிறீர்கள்.

இன்று நாட்டில் ஒரு நாளைக்கு 2600 நோயாளிகள். நேற்று 22 பேர் இறந்தார்கள். இவை கணக்கில் எடுக்கப்பட்டவை மட்டுமே. இவற்றை தவிர இன்னமும் உள்ளனவா என் தேடிப்பார்க்க வேண்டும்.

நாட்டை மூட நீங்கள் மறுப்பது ஏன்? இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, துறைமுக நகர சட்டமூலத்தை சபையில் “பாஸ்” செய்துக்கொள்ள பார்க்கிறீர்கள். அதுதான் தேவை என்றால், நாட்டை மூடி, பாராளுமன்றத்தை மாத்திரம் திறந்து வையுங்கள்.

அடுத்தது, உங்களால், நாட்டை மூடி விட்டு, மக்களுக்கு நிவாரணம் தொகை வழங்க முடியவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20,000 வழங்க வேண்டும். பணம் இல்லை. ஆனால், சீனி கொள்ளையில் வந்த நிதி திறைசேரிக்கு வந்திருந்தால் அதுவே போதும். அந்த தொகை ரூ. 1600 கோடி எங்கே போனது?

நாட்டை மூடினால், நாளாந்த சம்பளம் பெறுவோர், சுய தொழில் செய்வோர் என எத்தனை குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கணக்கெடுங்கள். எப்படியோ எல்லா அபிவிருத்தி திட்டங்கள், புதிய வீதிகள், புதிய உடற்பயிற்சி ஜிம்கள் ஆகியவற்றை இடை நிறுத்தி வைத்து விட்டு, ஒரு குடும்பத்துக்கு ரூ. 20,000 வழங்குங்கள்.

கோதாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவிக்கு வந்த உடன், அவர் இந்திய பிரதமர் மோடியின் வழியில் போகிறார் என்று சொல்லப்பட்டது. இப்போது பார்த்தால் அது சரிபோல் தெரிகிறது.  பிரதமர் மோடி, அவரது குஜராத் ஊரில் ஸ்டேடியம் கட்டி, அங்கே 125,000 பேரை கூட்டி, இந்திய-இங்கிலாந்து கிரிகட் மேளா நடத்தினார். பின், உத்தரகாண்டில் 90 இலட்சம் பேரை கூட்டி கும்பமேளா என்ற மதவிழாவை நடத்தினார். பின் ஐந்து மாநிலங்களில் தேர்தல் மேளா நடத்தினார். அப்போது ஒரு நாளைக்கு இந்தியாவில், 20,000 பேர்தான் கொரோனா நோயாளிகளாக இருந்தார்கள். இவருக்கு பிறகு இப்போது அது ஒரு நாளைக்கு நான்கு இலட்சத்தை தாண்டி விட்டது.  இறப்பும் கூடி விட்டது.

அதுபோல் நம்ம ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, இப்போது குட்டி மோடி ஆகி விட்டார். கோதாபய ராஜபக்ச, நரேந்திர மோடியின் பெரிய தம்பி என்றால், கோதாவின் சிஷ்ய பிள்ளை கெஸ்பாவையில் இருக்கும் அமைச்சர் காமினி லொகுகே, சின்ன தம்பி ஆகியுள்ளார்.      

தோட்ட தொழிலாளர்களை தனிமைப்படுத்தி, தொழிற்சங்கங்களை முடக்கும் நோக்கிலேயே சந்தாப்பணத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் கை வைத்துள்ளன. இதற்கு எதிராக போராடுவோம். இது தொடர்பில் தொழில் ஆணையாளரிடமும் முறையிடப்பட்டுள்ளது  என் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் நேற்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா சம்பளம் கிடைத்தாலும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீரவில்லை. தோட்ட நிர்வாகங்களின் அழுத்தங்கள், கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. தொழில் சுமைகளை அதிகரித்து, தொழிலாளர்களை நசுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறிப்பாக, 20 கிலோ கொழுந்து ஒரு நாள் பறிக்கவேண்டும் கட்டளையிடப்பட்டுள்ளது.   தொழிலாளர்கள் அனுபவித்துவந்த சலுகைகள், நிர்வாகங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாது, தோட்டத் தொழிலாளர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு செலுத்தும் சந்தாப்பணம் அறவிடுவதை கம்பனிகள் நிறுத்தியுள்ளன. தொழிலாளர்கள் தொடர்பில், தொழிற்சங்கங்கள் தலையிடக்கூடாது என்பதே இதன் நோக்கமாகும்.  இதனை நாம் எதிர்க்கின்றோம். இவ்விடயம் உட்பட 10 பிரச்சினைகளை பட்டியலிட்டு, தொழில் ஆணையாளருக்கு மலையக மக்கள் முன்னணி கடிதம் அனுப்பியுள்ளது.

தொழிற்சங்கங்களை அடக்கி, தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்காக சந்தாப்பணத்தில் கைவைத்துள்ள கம்பனிகளுக்கு எதிராக போராடுவோம். தொழில் ஆணையாளர் தீர்வை பெற்றுத்தருவார் என நம்புகின்றோம்.

அதேவேளை, இரசாயன உரப்பயன்பாட்டுக்கு எடுத்த எடுப்பிலேயே தடை விதித்தமை தவறு. இதனால் பல துறைகள் பாதிப்படையக்கூடும். மாற்றுவழியை அடையாளம் காணப்பட்ட பின்னர் தீர்மானமொன்றுக்கு சென்றிருக்கலாம். அதனைவிடுத்து அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு தவறு என்றும் தெரிவித்தார்.

தற்பொழுது முடிவுக்கு வந்துள்ள கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்வதற்கு மலையகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்ளும் முன்வரவேண்டும். அப்போதுதான் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளையும், சலுகைகளையும் உரியவகையில் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தலைவருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

ஹட்டனில்  இன்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 3ஆவது அலை தற்போது வேகமாக பரவிவருகின்றது. இதனால் மலையக மக்களும் அச்சத்துடன்தான் வாழ்கின்றனர்.வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் ஏனைய பகுதிகளில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் அரசும், சுகாதார தரப்பும் மந்தகதியிலேயே செயற்படுகின்றன. பி.சி.ஆர். பரிசோதனைகள்கூட முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை.

அத்துடன், நகர்ப்புறங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. ஆனால், பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்னும் ஏற்றப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களும் இந்நாட்டின் மக்கள்தான். அவர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்வாகங்களால் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. 08 மணிநேரம் தொடர் வேலை உட்பட தொழிற் சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் தொழிற்சங்கங்களையும் ஒடுக்குவதற்கு கம்பனிகள் முயற்சிக்கின்றன.

இதன் ஓர் அங்கமாகவே தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்திலிருந்து சந்தா அறிவிடுவதை நிறுத்தியுள்ளன. சந்தா நிறுத்தப்படுவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால், அந்த போர்வையில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசமாக உள்ள தொழிற்சங்கங்களை ஒடுக்க முற்படுவதை அனுமதிக்க முடியாது. கூட்டு ஒப்பந்தம் அமுலுக்கு வருவதற்கு முன்னரும் சந்தா அறவிடப்பட்டுள்ளது என்பதை துரைமார் சம்மேளனம் புரிந்துகொள்ள வேண்டும்.

 

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவருகின்ற நிலையில், மாகாண மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இலங்கை முன்பாக மிகப்பெரிய பிரச்சினையாக கோவிட்-19 தொற்று காணப்படுகின்றது. தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து நிதி ஒதுக்கீடுகளையும் அரசாங்கம் செய்திருப்பதோடு அதுசார்ந்த எந்த சந்தேகமும், நெருக்கடியும் இல்லை. தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் உள்ள தாமதமே இன்று சற்று பிரச்சினையாகவுள்ளது. தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்ற நிறுவனங்களின் ஆய்வுகூடங்களில் சில நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பூனே பகுதியிலுள்ள தடுப்பூசி உற்பத்தி நிறுவனமாகிய சீரம் நிறுவனம் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாரதூர நிலைமையே இதற்கு காரணமாகும். இதனால், தடுப்பூசியை பெறுவதிலுள்ள தாமதமானது எமது நாட்டிற்கான பிரச்சினை மாத்திரமல்ல. இதுவரை 03 வகையிலான தடுப்பூசிகள் எமது நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. தடுப்பூசி மற்றும் வேறு மாற்றுவழிகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்திவருகிறது. கிராம சேவகப்பிரிவு, பொலிஸ் பிரிவுகள் என்பன அவசியமாக நிலைமையில் மூடப்பட்டுள்ளதுடன், நிலைமை சரியாகியான் பின்னர் மீளத்திறக்கப்படுகின்றன. இதுதவிர, வேறு நடவடிக்கை குறித்தும் அரசாங்கம் சிந்தித்து நடவடிக்கையை எடுக்கவும் தயாராகவுள்ளது.

மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் அவசியமான தருணத்தில் பயணக்கட்டுப்பாடு விதித்து அமுல்படுத்தவும் அரசாங்கம் தயாராகவுள்ளது. ஆரம்பத்திலேயே எந்த நடவடிக்கையையும் நாங்கள் நிராகரித்தவில்லை. கொரோனா தொற்று நாளுக்குநாள் மாற்றமடைகிறது. அதனால் அதனைக்கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்து அமுல்படுத்த அரசாங்கம் தயாராகின்றது. இதனிடையே பலவிதமான விடயங்களை அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. மக்களின் ஜீவனோபாயம் பற்றியும் கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.

நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட நோர்வூட் நகரில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் உட்பட மூன்று பேரை நோர்வூட் பொலிஸார் இன்று கைது செய்தனர்.

நீண்ட காலமாக நோர்வூட் நகரப்பகுதியில் போதை பொருள் வர்த்தகம் மிகவும் சூட்சமான முறையில் இடம்பெற்று வருவதாக நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து, குறித்த சுற்றிவளைப்பு நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வி.ஏ.சி.ஆர். பிரேமலால் தலைமயில் நடைபெற்றது.

மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சா 150 கிராம், ஐஸ் ரக போதைப்பொருள் 10 சிறிய பக்கட்டுகள், ஹெரோயின் ஒரு கிராம், 14 லைட்டர்கள், 12 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம், இரண்டு செல்லிடப்பேசிகள், போதை பொருள் பாவனைக்கு பயன்படுத்தும் உபகரணங்கள், போதை பொருள் பொதி செய்வதற்கு பயன்படுத்தும் பொலிதீன்கள் ஆகியன இதன் போது பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

குறித்த சுற்றிவளைப்பின் போது போதை பொருள் கொள்வனவு செய்வதற்காக வருகை தந்தபோது முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் மேலும் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், முச்சக்கரவண்டி பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகம் செல்லிடப்பேசினூடாக இடம்பெற்று வந்துள்ளதாகவும், சந்ததேக நபர்களிடம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளன.

கைது செய்யப்பட்ட இளைஞன் நோர்வூட் பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் கொழும்பிலிருந்து போதைப்பொருட்கள் கொண்டு வந்து இங்குள்ள இளைஞர்கள் மற்றும் சாரதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் இதன் போது தெரிவித்தோடு,கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

கென்யா நாட்டின் நைரோபியிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த தென்னாபிரிக்க பிரஜை ஒருவரிடமிருந்து சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான 2.29 கிலோ கிராம் கொக்கேயின் போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் 20 இலட்சம் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் நாளொன்றுக்கு 500 முதல் 600 வரையான பீ.சீ.ஆர் முடிவுகளையே பெற்றுக் கொள்வதற்கான வசதியே காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மவாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்  விசனம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா நிதியத்திலுள்ள நிதியில் குறைந்தளவான நிதியே செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், ஏனைய நிதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், கொழும்பு - நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் வைத்து  கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சாணக்கியன்,  கிழக்கு மாகாணத்தின் எந்த மாவட்டத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டாலும் அதன் முடிவுகள் 10 நாட்களுக்கு பிறகே தெரியவரும் அவல நிலைமை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோர் காவல்த்துறையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்

நேற்று (07)மட்டும் இலங்கை முழுவதிலும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 617 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இது வரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்களில் அதிகமானோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளிகளை பேணாமை உள்ளிட்ட கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.

 

Page 1 of 649
© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd