web log free
May 08, 2021
editor

editor

வாகனங்கள் ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கும் திலும் அமுனுகம அவர்கள்

சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ தோட்ட தொழிலாளர்கள்  இன்று(03)  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

1000 ரூபா கிடைத்ததில் இருந்து மேலதிக கொடுப்பனவு கிடைப்பதில்லை எனவும், வேலை நாட்கள் குறைக்கப்படுவதாகவும், தோட்ட அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்துமே தொழிலாளர்கள் பொகவந்தலாவ அட்டன் பிரதான வீதியில் இருமருங்களிலும் நின்று இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தேனீருக்கு 05 நிமிடத்தை கூடுதலாக எடுத்தால் கூட கடுமையாக எச்சரிக்கின்றனர். காலையில் இருந்து இரவு வரை வேலை வாங்குவார்கள். எந்த பயனும் இல்லை. எனவே தோட்ட அதிகாரி வேண்டாம். கிழமையில் மூன்று நாள் வேலை தருவதாக சொல்லி இரண்டு நாளே வேலை தருகின்றனர். இதனை கேட்கச் சென்ற இளைஞர்களையும் பொலிஸில் நிறுத்தியுள்ளனர். அதற்கான நியாயம் வேண்டும்.

20 கிலோ கொழுந்தை பறிக்குமாறு கேட்கின்றனர். அப்படி பறிக்க முடியாது. 13 நாள் வேலை கூட கடந்த மாதம் கிடைக்கவில்லை. ஆயிரம் ரூபா கொடுத்ததில் பிரயோசனம் இல்லை.

ஆகவே இந்த முகாமையாளர் தேவையில்லை என கருத்து தெரிவித்தனர்.

 

தமிழக சட்ட மன்ற தேர்தலில் பத்து வருடங்களுக்கு பின்பு அதிகப்படியான தொகுதிகளில் வெற்றிக்கொண்டு, தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் சார்பிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை பின்தள்ளி தி.மு.க அமோக வெற்றிப்பெற்றுள்ளது. இந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் வெற்றி இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினரின் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்தே இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்க்கும், திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதற்கமைய எனது தந்தை ஆறுமுகன் தொண்டமானின்; மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததை நன்றியோடு நினைவு கூறுகின்றேன்.

ஆகவே, கடந்த காலங்களில் திமுகவுடன் உள்ள உறவை மேலும் கட்டியெழுப்பி நட்போடு பயணிப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

நாம் பதவியிலிருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தகவல் அறியும் உரிமையையும், ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச சர்வதேச ஊடக சுதந்திர தினத்தையொட்டி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்றைய தினத்தில் மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வதற்காக இரவு பகலாக அயராது உழைக்கும் அனைத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தகவல் தொடர்பு தற்போது உலகில் மிக வேகமாக முன்னேறிவரும் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. கடந்த சில தசாப்தங்களில் பல்வேறு ஊடகங்களின் ஊடாக தகவல்கள் பொதுமக்களை சென்றடையும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது.

எனினும், சுயாதீனமான மற்றும் பொறுப்பான ஊடக பாவனையே காலத்தின் தேவையாகும். முறையான ஊடக பயன்பாட்டின் மூலமே மக்களின் தகவல் அறியும் உரிமை பாதுகாக்கப்படுகிறது.அதற்காக பணியாற்றுவது அனைவரதும் பொறுப்பும், கடமையுமாகும் என நான் நம்புகின்றேன்.

இந்நாட்டின் ஊடக சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விசித்திரமான காலங்களை நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை. நாம் அதிகாரத்தில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தகவல் அறியும் உரிமையையும், ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

முழு உலகமும் தொற்று நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் 'தகவல்கள் பொதுமக்களின் நலனுக்கானது' எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை கொண்டாடுவது காலத்திற்கு உகந்ததாகும்.

நாடு என்ற ரீதியில் இந்த தொற்றுநோயை எதிர்கொண்டு, அதனை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் பொதுமக்களை தெளிவுபடுத்தி, உயிராபத்தையும் பொருட்படுத்தாது ஊடகவியலாளர்கள் நிறைவேற்றும் இந்த உன்னத செயற்பாட்டையும், அர்ப்பணிப்பையும் அரசாங்கம் எப்போதும் பாராட்டும்.

அறிவை ஆயுதமாகக் கொண்ட ஊடகவியலாளர்களின் தொழில் வளர்ச்சிக்காக கல்வி புலமைப்பரிசில்கள் மற்றும் ஊடக உபகரணங்களை வழங்குவதற்கான எமது நடவடிக்கை எதிர்காலத்திலும் செயற்படுத்தப்படும்.

துல்லியமான செய்திகளை அறிந்துக் கொள்வதற்கான மக்களின் உரிமையை பாதுகாத்து, நாட்டின் ஒட்டுமொத்த சமூக, கலாசார மற்றும் பொருளாதார அபிலாஷைகளை அடைவதற்கு ஊடக சுதந்திரத்தை பயன்படுத்துமாறு அனைத்து ஊடகவியலாளர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பு செங்கலடி செல்லம் திரையரங்க உரிமையாளரும், தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன் கைது நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரது படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் கணினி குற்றப்பிரிவினரால் அவர், செங்கலடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூலின் பதிவுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.

2019 ஆண்டு முதல் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களின் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆராய்ந்ததில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சி சார்ந்தவையாக இருந்தமையால் அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக காவல்த்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

 

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் (மேற்கு) கிராம உத்தியோகத்தர் பிரிவின் 3  குறுக்கு வீதிகளை முற்றாக முடக்குவதற்கான தீர்மானத்தினை மேற்கொண்டு, தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு பரிந்துரை செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின்  தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் மாவட்ட  அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன்
தெரிவித்திருந்தார்.

அவர்  இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் சிகிச்சை பெறுவதற்காக  திசவீரசிங்கம் சதுக்கம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் சென்றிருந்த போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் குறித்த நபர் கொவிட் தொற்றுக்குள்ளாகியது உறுதிப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, குறித்த நபர் வசித்த பகுதிக்குச் சென்ற சுதாதாரத் தரப்பினர் எழுமாறாக 24 பேருக்கு மேற்கொண்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 11 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து நேற்று (02) திகதி அவசரமாக கூடிய மட்டக்களப்பு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி இது தொடர்பில் ஆராய்ந்த போது  கிடைக்கப் பெற்றுள்ள அறிக்கைகளின் படி மொத்தமாக நேற்றைய தினம் 32 பேர் கொவிட் நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் 12 பேர் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், நான்கு பேர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், எட்டுப் பேர் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், இரண்டு போர் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், ஐந்து பேர் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்தவர்களாகவும், ஒரு பொலிஸ் உத்தியோகத்தருமாக  இனங்கானப்பட்டதைத் தொடர்ந்து,  இது தொடர்பில் ஆராய்ந்த போது உடனடியாக திசவீரசிங்கம் சதுக்கம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கொவிட் செயலணிக்கு சிபாரிசு செய்வதென ஏகமனதாக முடிவெடுத்து, உடனே அந்த முடிவு செயலணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை, கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சரால் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட வழிகாட்டல் குறிப்பிற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில்  தீவிரமாக நடைமுறைப்படுத்தியிருந்ததுடன், இருந்த போதிலும் அந்த வழிகாட்டல் குறிப்பை சற்று இறுக்கமாக்கி கடந்த முதலாம் திகதியில் இருந்து சுகாதார துறை  பணிப்பாளர் அவர்களினால் மேலும் ஒரு வழிகாட்டல் குறிப்பு நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இணங்க அதில் சில விடயங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆலயங்களிலே ஒன்று கூடுதல், மதவழிபாடுகளில் கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல், தனியார் வகுப்புக்களை நடாத்துதல் போன்ற பல விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த 50% வீதமானது 25% வீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் வழி காட்டல் குறிப்புகள் நாட்டின் மாறிவருகின்ற சூழலுக்கு  ஏற்ப மாற்றமடைந்து கொண்டு வருகின்றது அதனையும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரிவிக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

இந்த மாதம் றமழான் மாதம் என்பதால் பள்ளிவாசல்களிலே கூட்டாக தொழ முடியாது, பிரத்தியேக வகுப்புகள் நடாத்த முடியாது, சமய வகுப்புக்கள் நடாத்த முடியாது, மரணச் சடங்குகளிலே 25 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும், அதுவும் கொவிட் அல்லாத மரணம் சம்பவித்தால் 24 மணித்தியாலத்திற்குள்ளே இறுதிக் கிரிகைகள் நடாத்தப்பட வேண்டும். இவ்வாறான பல கட்டுப்பாடுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல் குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்திருந்தார்.

இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினைக்கு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு நடந்து முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில் வெற்றியீட்டி முதல்வாராக பதவி ஏற்கவுள்ள ஸ்டாலின் தீர்வு தருவார் என நம்புவதாக நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் தீர்வை வழங்க ஒத்துழைக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை பின்தள்ளி தி.மு.க அமோக வெற்றிப்பெற்றுள்ளது.

தி.மு.க வெற்றிப் பெற்றதால் புதிய தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியுள்ளதுடன் அவர் எதிர்வரும் 6 ஆம் திகதி முதலமைச்சராக பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், ஸ்டாலினின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இராதாகிருஸ்ணன் ஊடகங்களிடம் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தி.மு.க.வின் வெற்றி இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள வெற்றியாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் வே.இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் நம்மை எல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள்! 'ஜனநாயகத்தில் ஜனங்களே எஜமானர்கள்' என்றார் நமக்கு எல்லாம் உணர்ச்சியை ஊட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்!

தமிழ்மொழிக்கும் - இனத்துக்கும் - நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகத்திடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவைக் கழகக் கூட்டணிக்கு வழங்கியுள்ளார்கள்.

தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செலுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, கழக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது. அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றியாகும்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு இயக்க ரீதியாகவும் - ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன்.

எத்தனை சோதனைகள் - எத்தனை வேதனைகள் - எத்தனை பழிச்சொற்கள் - எத்தனை அவதூறுகள் - என கழகத்தின் மீது வீசப்பட்ட அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

உங்களுக்கு உண்மையாக இருப்பேன்! உங்களுக்காக உழைப்பேன்! என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்!

இந்த வெற்றிக்கு உழைத்த கழகத்தின் கோடானு கோடி உடன்பிறப்புகளுக்கு நன்றி. கட்சிகளின் கூட்டணியாக இல்லாமல், கொள்கைவாதிகளின் கூட்டணியாகக் கழகத்தோடு இணைந்து தோள் கொடுத்த தலைவர்கள், அந்த இயக்கங்களைச் சார்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி!

ஜனநாயகப் போர்க்களத்தில் தி.மு.க. கூட்டணி அடைந்த வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல மதித்தும் நினைத்தும் காலையில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.

தமிழகத்தில் அமையப் போகும் கழக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும்.

கழகம் வென்றது! - அதைத் தமிழகம் இன்று சொன்னது!

இனித் தமிழகம் வெல்லும்! - அதை நாளைய தமிழகம் சொல்லும்!

 

அப்கானிஸ்தானில் அரசு விருந்தினர் இல்லம் அருகே நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில், பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் பலியாகினர்.

அப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி பல நாடுகளுக்கு அகதிகளாக சென்று உள்ளனர்.

இந்நிலையில், லோகர் மாகாணத்தின் தலைநகர் புல்-இ-ஆலமில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ரமலான் மாதத்தினை ஒட்டி இஸ்லாமிய மக்கள் நோன்பு துறந்தனர். அப்போது, மருத்துவமனைக்கு வெளியே திடீரென கார்மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி, பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் பலியாகினர். காயமடைந்த 70 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்‍கு அனுமதிக்‍கப்பட்டனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Page 3 of 649
© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd