web log free
May 08, 2021
editor

editor

நுவரெலியா மாவட்டம் வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நில்தண்டாஹின்ன பகுதி இன்று (02) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நில்தண்டாஹின்ன கிராம சேவக பிரிவிற்குட்பட்ட 4 பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

இந்நிலையிலேயே வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் நில்தண்டாஹின்ன முடக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும், நபர்கள் உள்ளே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ளவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 1500 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (01)முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் நீர்கொழும்பு கடற்கரைப் பகுதியில் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பீடி இலைகளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி சுமார் 1 கோடியே 20 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பீடி இலைகள் தூத்துக்குடியிலிருந்து சர்வதேச கடற்பிராந்தியம் வரை கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இலங்கை படகு மூலம் அவை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பீடி இலைகளை கொண்டு செல்வதற்காக வந்த மூன்று வாகனங்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளுடன் சந்கேநபர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்று மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (01) தெரிவித்தார்.

முல்லைத்தீவு பிரதேசத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் அதனைத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை மீறியும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்றால் அவர்கள் கைது செய்யப்படுவது மட்டுமன்றி அவர்களின் உடமைகளும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா தொற்றின் அச்சம் இருப்பதால் இருநாட்டு மீனவர்களும் ஆழ்க்கடலில் கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை எதிர்வரும் மே 18ஆம் திகதி உள்ள உள்நாட்டுப் போர் முடிவுற்ற தினத்தில் யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை தமிழர்கள் நினைவுகூர ஒருபோதும் அரசாங்கம் தடைவிதிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

அம்பாறை மாவட்டம், கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் இருந்து, கடலுக்கு சென்ற மீன்பிடிப் படகு ஒன்று, மின்னல் தாக்கத்துக்கு உள்ளானதில், இரண்டு மீனவர்கள் பலியாகினர்.

மேலும் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த மீன்பிடிப் படகு நேற்று (30) அதிகாலை கடலுக்கு சென்றபோது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது உயிரிழந்தவர்களின் சடலங்கள், நேற்று (30) பிற்பகல் கரைக்கு கொண்டுவரப்பட்டு, வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரும், கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

ஹோட்டல்களில் இடம்பெறும் விருந்துபசாரங்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் இரவுநேர கேளிக்கை போன்றவற்றுக்கு இன்று (01) இரவு 10 மணி தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என்று கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளையில், நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் 10 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து வெள்ளிக்கிமையன்று தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக நேற்று (30) வரையில் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. இதேபோன்று  கத்தோலிக்க பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , இக் காலப்பகுதியில் இணைய சேவையின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.,

தக்ஸலாவ மற்றும் குருகுலம் போன்ற தொலைக்காட்சி சேவை நிகழ்ச்சிகளின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனிடையே, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரும் அந்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

 

மியான்மர்-தாய்லாந்து எல்லைப்பகுதியில் தாக்‍குதல்கள் அதிகரித்துள்ளதால் ஏராளமான பொதுமக்‍கள் வீடுகளை விட்டு வெளியேறி அடர்ந்த வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

மியான்மர் நாட்டில் புரட்சி மூலம் ஆட்சி அதிகாரங்களை இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களாக இராணுவத்துக்‍கு எதிராக பொதுமக்‍கள் போராடிவருகின்றனர். காட்டுப்பகுதியில் உள்ள கேரன் இனக்‍குழு மக்‍கள் ஆயுமேந்திய தாக்‍குதல்களையும் நடத்திவருகின்றனர். இதனால், மியான்மர்-தாய்லாந்து எல்லைப்பகுதியில் பொதுமக்‍கள் வீடுகளை விட்டு வெளியேறி தாய்லாந்து நாட்டுக்‍குச் சொந்தமான காடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட பெருந்தொகையான மஞ்சள், ஏலக்காய் என்பவற்றை கடற்படையினர் இன்று சனிக்கிழமை (1) அதிகாலை நீர்கொழும்பு போருதொட்டை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.

865 கிலோ கிராம் மஞ்சள், 80 கிலோகிராம் ஏலக்காய், அவற்றை கொண்டு சென்ற வாகனம் என்பவற்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கொச்சிக்கடை , பல்லன்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.

சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் வாகனம் என்பவற்றை கடற்படையினர் நீர்கொழும்பு பொலிஸாரிடம் இன்று ஒப்படைத்தனர். இதனையடுத்து நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், வெளி மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இராணுவத்தின் பொலிசார் மீன்பிடி அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

மக்கள் கொரோனா தொற்றால் அவதிப்படும் நிலையில் அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து விமானங்ளை கொள்வனவு செய்ய அவசரப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்னண் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நுவரெலியா – கொத்மலை ரம்பொட ஆஞ்சிநேயர் ஆலயத்தில் மே தினத்தை முன்னிட்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று காலை நடைபெற்ற விசேட வழிப்பாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வழிபாடுகளில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.விஜயசந்திரன், மலையக தொழிலாளர் முன்னணி செயலாளர் கே.சுப்பிரமணியம், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் விஷ்வநாதன் புஷ்பா, தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் கொரோனா தாண்டவம் ஆடி கொண்டிருக்கும் போது அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து நான்கு ஹெலிகொப்டர்களை அதிக பணம் கொடுத்து கொள்வனவு செய்ய முயற்சிக்கின்றது. எனவே, முதலில் மக்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அது தொடர்பில் அக்கறை செலுத்தாமல் விமான கொள்வனவு குறித்து கவனம் செலுத்துகின்றனர். இதனை அநாவசிய செலவாக கருதாவிடினும் தற்போதைய நிலையில் அதற்கு முன்னுரிமை வழங்குவது உசிதமற்றது.

ஆகவே, தேவையானதுக்கு முதலிடம் கொடுத்து செயற்பட வேண்டும். எனினும் அரசாங்கம் இவ்வாறு திட்டமிட்டு செயற்படுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பான விவாதத்தை ஒரே நாளில் நடத்தி அதை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

எதிர்கட்சிகளை புறக்கணித்து இவ்வாறு ஜனாநாயக விரோத செயற்பாட்டில் இறங்கியுள்ளளது இது புரியாத புதிராகும். இருபதாவது திருத்தத்தை ஆதரித்து ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்கிய சிறுபான்மை உறுப்பினர்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது என்றார்.

 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் பயணித்த வாகனத் தொடரணிக்காக வீதியை மறித்தமைக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதாகிய இளைஞனுக்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தாம் செய்தது குற்றம் என்பதை பகிரங்கமாக ஊடகங்களுக்கு முன்பாக ஏற்றுக்கொண்ட குறித்த சந்தேக நபர், அதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் மன்னிப்பும் கோருவதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கைக்கு விஜயம் செய்த சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் தலைமையிலான குழுவினர் கொழும்பு - பொரளைப் பிரதேசத்தில் வைத்து வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக செல்கின்ற வாகனங்களை காவல்துறையினர் மறிப்பதற்காக வீதித்தடைகளை இட்டிருந்தனர்.

நீண்டநேரமாக காவல்துறையினர் போக்குவரத்திற்கு அனுமதிக்காததினால் ஆத்திரமடைந்த வாகன சாரதிகள், அதற்கெதிராக தங்களது எதிர்ப்பினை வாகனங்களில் ஒலியேற்படுத்தியும், கூச்சலிட்டும் வெளிப்படுத்தினர்.

இந்த சந்தர்ப்பத்தில் பதிவுசெய்யப்பட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

சம்பவத்தைத் தொடர்ந்து பொரளை காவல்துறையினர் விரைந்து அவரை நேற்று முன்தினம்  இரவு கைது செய்ததோடு, நேற்று தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

கொழும்பு - பத்தரமுல்லைப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஜயரத்ன முதியான்சலாகே நாவின் என்கிற சந்தேக நபர், கடந்த பல வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தொழில்புரிந்து வந்திருக்கின்றார்.

இந்த நிலையில் நீதவான் ரஜின்திரா ஜயசூரிய முன்பாக பிணைகோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல சந்தேக நபருக்கு அனுமதியளிக்கப்பட்டதோடு அவ்வாறு இனி நடந்துகொள்ள வேண்டாம் எனவும் நீதிமன்றத்தினால் ஆலோசனையும் கூறப்பட்டது.

மேலும் இதுகுறித்த அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி வரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதேவேளை சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் பயணித்த வாகனத் தொடரணிக்காக வீதியை பொலிஸார் இடைமறித்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சிலருக்குப் பின்னால் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கும், வீதித் தடை முன்பாக வாகன ஒலியெழுப்பி அமைதியின்மையில் ஈடுபட்ட நபருக்கும் இடையே தொடர்பிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சீனப் பாதுகாப்பு அமைச்சர் பயணித்த வாகனத் தொடரணிக்காக வீதியை மறித்த காவல்துறையினரது செயற்பாட்டினை எதிர்த்த இளைஞன் கைது செய்யப்பட்டமைக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு தனிப்பட்ட நபர் ஒருவரது செயலின் கைதுக்குப் பின்னால் இருக்கின்ற மர்மத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

 

Page 4 of 649
© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd