web log free
May 08, 2021
editor

editor

சர்வதேச தொழிலாளர் தினமான இன்றைய தினத்தில் உழைக்கும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம் உழைக்கும் மக்களின் தலைசிறந்த தினமாகும்.

பொதுவாக தமது நாட்டிற்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகினதும் முன்னேற்றத்திற்காக உழைக்கும் மக்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.

பணியிடத்தில் வியர்வை சிந்தி அனைவரினதும் நல்வாழ்விற்காக நீங்கள் ஆற்றும் சேவையை பாராட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

நாம் அனைவரும் அறிந்த வகையில் சர்வதேச தொழிலாளர் தினம் உழைக்கும் மக்களின் வலிமையையும், ஒற்றுமையையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் ஒரு தினமாகும்.

இருப்பினும், உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் தொற்று நிலைமை காரணமாக கடந்த ஆண்டு போன்றே இவ்வருடமும் பேரணிகள், கூட்டங்களின்றி சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய பேரழிவு சூழ்நிலையில், இலங்கை உழைக்கும் மக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி மே தினத்தை புதிய வழியில் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

எவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலேனும் உழைக்கும் மக்களுக்கான உரிய மரியாதையை எமது அரசாங்கங்கள் வழங்கியுள்ளது என்பதை இத்தருணத்தில் நினைவூட்டுகின்றேன். அத்துடன் தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதிலும் உறுதியாக செயற்பட்டோம்.

இரண்டாயிரத்து இருபத்தொன்று ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்தபடி ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுக்க முடிந்தமை நாம் பெற்ற வெற்றியாகும்.

அத்துடன் தொழிலாளர் சமூகத்தின் நலனை கருத்திற்கொண்டு ஊழியர் சேமலாப நிதி சட்டம், தொழில் பிணக்குகள் சட்டம் மற்றும் இழப்பீட்டு கட்டளை சட்டம் போன்ற பல தொழிலாளர் சட்டங்களை புதுப்பித்ததன் ஊடாக தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எமது அரசாங்கத்திற்கு முடிந்துள்ளமை உங்களுக்கான மரியாதை என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

'மக்கள் நலன் சார்ந்த பணியிடம் பாதுகாப்பான தேசம்' எனும் தொனிப்பொருளிலான இவ்வாண்டு மே தினத்தில் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் கைகோர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.

கொவிட் தொற்றுக்கு மத்தியில் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக இரவு பகலாக உழைக்கும் உங்களது அர்ப்பணிப்பையும், தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான உங்களது பங்களிப்பையும் நான் மனதார பாராட்டுகின்றேன்.

உலகவாழ் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

 மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்
பிரதமர்

 

மக்களுக்கு உறுதியளித்தபடி எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் உறுதி செய்துள்ளது என மே தின செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மக்களுக்கு உறுதியளித்தபடி எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் உறுதி செய்துள்ளது. மேலும், எமது பாரம்பரிய மரபுரிமைகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்தும் அதேநேரம், விவசாய பொருளாதாரத்தை அபிவிருத்திசெய்வதற்கு தேவையான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை எமது சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான தெளிவான பொருளாதார திட்டத்தை நாங்கள் வகுத்து, முறையாக செயற்படுத்தி வருகிறோம்.

தற்போதைய கோவிட் 19 நோய்த்தொற்றினால் உலகில் மிகவும் சவாலுக்கு உள்ளாகியுள்ள பிரிவினர் தொழிலாளர் வர்க்கமாகும். எமது நாட்டின் உழைக்கும் மக்களும் முகம்கொடுத்திருக்கும் அந்த யதார்த்தத்தை அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. எனவே, உழைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடிய கட்டுப்பாடுகளை விதிக்காமல் அவர்கள் தமது இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கல்வித் தகைமைகள் இல்லாத காரணத்தினால் நிர்க்கதியான நிலையில் இருந்த ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு அரச சேவையில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் மிக உயர்ந்த பயனை அனுபவிக்கும் வாய்ப்பு உழைக்கும் மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கிடைத்துள்ளது. கோவிட் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு அளித்து உழைக்கும் மக்களின் போராட்டத்திற்கு அரசாங்கம் ஆதரவு அளித்தது.

புத்தாண்டு காலத்திலும் ரூபா 5 ஆயிரம் கொடுப்பனவை பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. கோவிட் தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களின் ஊதியங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை என்பதுடன், நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த அனைத்து பொது நலத் திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்ததன் மூலமும் உழைக்கும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. அதேபோல், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் மூலம் அந்த மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் வழி செய்தது.

பத்தொன்பது வகையான இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து பலப்படுத்தப்படும் சுதேச பொருளாதாரத்தின் நன்மைகளில் பெரும் பகுதி எமது நாட்டின் விவசாய சமூகத்தை முதன்மையாக கொண்டு உழைக்கும் மக்களுக்கே கிடைக்கின்றது. பண்டிகை காலங்களில் விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான தடைகளை நீக்கியதன் மூலம் நீங்கள் பலமடைந்துள்ளீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தைப் போலவே, “வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு” திட்டம் நாட்டில் உழைக்கும் மக்களின் வாழ்க்கையுடன் நேரடி பிணைப்பை கொண்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய் காரணமாக எதிர்பாராத விதமாக தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் மே தின கொண்டாட்டங்களையும் ஊர்வலங்களையும் தொழிலாளர்கள் இழந்துள்ளனர். ஆயினும்கூட, உங்கள் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் வலுவானது என்பதை நாங்கள் அறிவோம். மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்திற்கான திட்டத்துடன் கைகோர்க்கும் உங்களுக்கு சர்வதேச தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்த, அர்த்தப்படுத்திய  மகிழ்ச்சியுடன் எனது சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

எமது நாட்டின் உழைக்கும் மக்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

கோட்டாபய ராஜபக்‌ஷ

2021 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி

சுமார் 317 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினர் இன்று(30) கைப்பற்றியுள்ளனர்.

26 கிலோ எடையுள்ள இந்த தங்கமானது பிஸ்கட்களாகவும், ஆபரணங்களாகவும் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப்பணிப்பாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.

கட்டார் நாட்டிலிருந்து வருகை தந்த பயணி ஒருவரால் விமான நிலைய கழிவறைக்குள் வைத்து, மிக சூட்சுமமாக விமான நிலைய சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் ஒருவரிடம் கொடுத்து தங்கத்தை வெளியில் கொண்டு செல்ல முயற்சித்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கத்தை வெளியில் கொண்டு செல்ல முயற்சித்த சுத்திகரிப்பு பணியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு அருகில் இன்று ((30)இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, முஜிபுர் ரஹ்மான் உட்பட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

ரிஷாட் பதியுதீன் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபர் இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

‘அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கவே இந்த கைது!, ரிஷாட் பதியுதீனின் கைது அரசியல் பழிவாங்கலாகும்! ரிஷாட் பதியுதீனுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!’ போன்ற பதாதைகளுடன் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் அனைத்து வகையான நிகழ்வுகளை நடத்த இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதியும் கொவிட் 19 ஒழிப்பு செயலணியின் தலைவருமான ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமையின்(3) பின்னர் இரு வாரங்களுக்கு எந்தவொரு திருமணம்  உள்ளிட்ட எந்தவொரு நிகழ்வையும் நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் 71ஆவது வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் திரு.டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் அவர்களினால் இன்று (30) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

நாணய விதிச் சட்டத்திற்கமைய மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, ஆண்டுதோறும் ஏப்ரல் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக நிதி அமைச்சருக்கு வழங்கி வைக்கப்பட வேண்டும்.

அதற்கமைய மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டில் இலங்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெற்றுக் கொண்ட பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் அரச கொள்கை கட்டமைப்பிற்குள் இலங்கை பொருளாதாரத்தின் போக்கு குறித்த கணிப்பும் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் திரு.டப்ளிவ்.டீ.லக்ஷ்மன், துணை ஆளுநர் திரு.மஹிந்த சிறிவர்தன, பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் திரு.சந்திரநாத் அமரசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு  இந்த அரசு அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில்  உயிரிழந்தோரை  நினைவு கூர இந்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இன்று (30) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தாங்கள் இறந்து போன தங்கள்  உறவுகளை தங்களோடு  வாழ்ந்த மக்களை தங்களுடன் சேர்ந்து இருந்த உறவுகளை கண்ணீர் சிந்தி நினைக்கின்ற மே 18 அந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நினைவு கூர  இந்த அரச அனுமதிக்க வேண்டும்.

இந்த அரசாங்கம் அதனை தவிர்த்து விட முயன்று வருகிறது. ஆனால், அது அரசாங்கத்தினுடைய தமிழ் மக்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய அநியாயமான  செயல் ஒன்றாகும். 

மிக முக்கியமாக எங்களைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு வணக்கம் செலுத்துவதற்கு  கோரிக்கை விடுக்கின்ற மதத் தலைவர்கள் சரி அல்லது இந்தத் தாக்குதலுக்காக விடுமுறை வழங்கி நாடாளுமன்றம் வரைக்கும் அஞ்சலி செலுத்துகின்ற இந்த நாட்டின் தலைவர்கள் ஒரு நியாயமான நீதியாக   ஜனநாயகத்தை நேசிப்பவர்களான இருந்தால்  உண்மையை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.

பகிரங்கமாக தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்டு உயிரிழந்தோரினை நினைவு கூர்ந்து  வணக்கம் செலுத்த அனுமதி வழங்குவதன் மூலமே அவர்கள் தங்களை மனிதர்களாக இந்த பூமிப்பந்தில் அடையாளப்படுத்த முடியும்.

ஆகவே, இது ஒரு முக்கியமான தமிழர்களுடைய வரலாற்றில் எல்லோராலும் பார்க்கப்படுகின்ற எல்லோராலும்  எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம். உலகத்திலே இருபதாம் நூற்றாண்டில் 21ம் நூற்றாண்டு காலகட்டங்களில் மனிதகுலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய பேரழிவு பெரிய அனர்த்தம் அதன்  நினைவு கூரலை தடுப்பது பௌத்த மதத்தை நேசிக்கின்ற புத்த பெருமானை  வணங்குகின்றவர்கள் புரியும் ஒரு காரியமல்ல. 

 

ஆகவே, அரசு ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நினைவு கூர எவ்வாறு அனுமதி வழங்கினார்கள். அதேபோல கடந்த காலங்களில் 2016 ல் இருந்து தமிழர்கள் இந்த வணக்கத்தை முள்ளிவாய்க்காலில் சென்று உணர்வுபூர்வமாக மேற்கொண்டார்கள். அந்த வகையில் அவர்கள் வணக்கம் செய்வதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

புர்கா தடைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை முஸ்லிம் மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளதாக  இம்ரான் மஹ்ரூப் எம்.பி தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயமும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் நேற்று (29)அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கொவிட்19 தாக்கம் மூன்றாம் கட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 14 நாட்கள் தனிமைப்படுத்தல் என்றிருந்த நிலையில் ஐந்து நாட்கள் பாடசாலை முடக்கியுள்ளதன் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

இலங்கை மக்களுக்கு இரண்டாம்கட்ட கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகளை தொடரமுடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப்பிரிவின் பணிப்பாளரான மருத்துவர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.

இதேவேளையில், எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையில் ஒட்சிசன் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கொவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவிடமிருந்து பெற்றபோதிலும் தற்போது அந்த நாடு இருக்கின்ற நிலைமையில் இரண்டாம்கட்ட தடுப்பூசிகள் இப்போதைக்கு பெற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது. கொரஸ் என்கிற சர்வதேச ரீதியிலுள்ள பிரபலமான சுகாதார நிறுவனங்கள் இணைந்து ஏற்படுத்திய அமைப்பின் ஊடாக தடுப்பூசிகளை கொள்வனவு செய்து ஏனைய நாடுகளுக்குப் பகிர்ந்தளித்தார்கள். ஆனாலும், இன்று அதனையும் அவர்களால் செய்யமுடியவில்லை. இந்த நிலையில், கொவிஷில்ட் தடுப்பூசி இப்போதைக்குக் கிடைக்காது. அரசாங்கம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றது. அதேவேளை, இருவேறு உற்பத்தி தடுப்பூசிகளை கலந்துவழங்குவது குறித்து ஆய்வுகள் நடத்தப்படுகின்ற நிலையில் அது வெற்றியளித்தால் அதனையும் நாங்கள் முன்னெடுப்போம். கொரோனா தொற்றினை தடுப்பதில் நாங்கள் தோற்றுவிட்டோம் எனக் கூறமுடியாது. தற்போதைய நெருக்கடிமிக்க நிலையில் நிலைமைகள் மாற்றமடையலாம். இருப்பினும்,  இந்த தொற்றானது, நுரையீரல்களையே தாக்குவதால் ஒட்சிசன் நெருக்கடி ஏற்படுகின்றது. அந்த சந்தர்ப்பத்தில் இயந்திரம் மூலமான ஒட்சிசன் ஏற்றுவதற்கான வசதியளிக்கப்படுகின்றது. இலங்கையை பொருத்தவரை இங்கு ஒட்சிசன் உற்பத்தி செய்கின்ற 02 நிறுவனங்கள் இருக்கின்றன. சாதாரண உற்பத்தியை விட மூன்று அடங்கு உற்பத்தி செய்கின்ற வேகத்தை அந்த நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன. 

இதேவேளை, தடுப்பூசி பெற்ற 65 தொடக்கம் 75 பேர் கொரோனா தொற்றுக்கு மீண்டும் இலக்காகிய நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவர் சுதத் சமரவீர இந்த ஊடக சந்திப்பின்போது கூறினார்.

 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (29) அலரி மாளிகையில் சந்தித்ததுப் பேசினார்.

கோவிட்19 பெருந்தெற்று நோய் காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுக்காக இலங்கை தலைமைத்துவத்துக்கு இதன்போது தூதுவர் தெரிவித்தார் என இச்சந்திப்புக் குறித்து இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சகலதுறைகளிலும் இருதரப்பு உறவை உயர்நிலைக்கு எடுத்துச்செல்ல பிரதமரின் வழிகாட்டுதலையும் அவர் கோரினார் எனவும் இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் இலங்கை வந்த சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி, பிரதமரை நேற்று சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இன்று இந்திய உயர்ஸ்தானினர் பிரதமரைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Page 5 of 649
© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd