web log free
July 26, 2021
editor

editor

ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் களமிறங்கியிருக்கும் புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், காலி முகத்திடலில் பெருந்திரளான மக்கள் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

வரலாற்றை புரட்டிபோட்ட இந்த கூட்டத்தில், நாடளாவிய ரீதியிலிருந்து வருகைதந்திருந்த இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

காலிமுகத்திடல் எங்குமே மக்கள் தலைகள் மட்டுமே கண்களுக்குத் தெரிந்தன.

கடல் எது? கரை எது என்று தெரியாத அளவுக்கு கடலுடன் சங்கமிக்கும் வகையிலேயே ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.

இதனை, பிரதான மேடையிலிருந்து பார்த்த, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் அனைவரும் பிரமித்துநின்றனர்.

உரையாற்றிய அனைவரும், மக்கள் வெள்ளத்தில் மிதந்து, ராஜபக்ஷ அணியினருக்கு சவால் விடுக்கும் வகையிலேயே உரைகளை நிகழ்த்தினர்.

சஜித் பிரேமதாஸ, ஆதரவாளர்களின் அரவணைப்புடன் மேடைக்கு அழைத்துவரப்பட்டார்.

சுமார் அரை மணிநேரத்துக்குப் பின்னரே, பிரதான மேடையை சஜித் பிரேமதாஸ வந்தடைந்தார்.

அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வாய்தவறி கூறிய வசனத்துக்காக, சகலரிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.

நான், ஆதரவாளர் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றிருந்தேன். அதற்கான சந்தரப்பம் கிடைத்தது. 

வாய் தவறி தான் கூறிய அந்த வசனத்துக்காக இலங்கையில் வாழும் சகல பிரஜைகளிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன் என இருகரம் கூப்பி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

பௌத்தத்தை நிந்திக்கும் வகையிலேயே, அவர் வசனமொன்றை அண்மையில் கூறியிருந்தார். 

இதனை மஹிந்த அணியினர் உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனக்காக காலி முகத்திடலுக்கு வந்திருக்கும் ஒவ்வொருவரின் பாதங்களுக்கு அண்மையில் வந்தே வரவேற்றிருக்க வேண்டுமென தெரிவித்த அவர், தன்னால் தற்போதைக்கு வரமுடியாது. அதற்கான நேரமும் இல்லை எனத் தெரிவித்த அவர், இரு கரம் கூப்பி, அனைவரையும் வரவேற்றது. அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்துவிட்டது. 

 

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணைக் கட்டளை நிராகரிக்கப்பட்டதன் பின்னர், கைது செய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகிய இருவரும் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

கடுமையான பாதுகாப்புக்கு மத்தியிலேயே அவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு, இருவர் பாதுகாப்பு கடமைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட அந்த வாட்டில்தான், வெலிக்கடை சிறைக்கலவரத்துக்கு காரணமாக இருந்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையளார் எமில் ரஞ்ஜன் மற்றும் பொலிஸ் பரிசோதகர் நியூமால் ரங்கஜீவ ஆகிய இருவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதனால், ஹேமசிறிக்கும், பூஜித்தவுக்கும் கடுமையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது. 

 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மேற்படி இருவரும், பிணையில் விடுக்கப்பட்டதன் பின்னர் பிணை நிராகரிக்கப்பட்டு மீண்டும் நேற்று (09) கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சினால், புதிதாக உருவாக்கப்படவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை கைப்பற்றவுள்ளார் என அறியமுடிகின்றது.

அந்த புதிய பெரமுனவின் தலைமையிலேயே எதிர்வரும் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தலில்களின் கதிரை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, அந்த புதிய பெரமுனவின் தலைமையைக் கைப்பற்றுவதற்கு குறிவைத்து, மஹிந்த ராஜபக்ஷ காய் நகர்த்துகின்றார் என அறியமுடிகின்றது. 

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் கடந்த திங்கட்கிழமையுடன் (ஒக்டோபர் 7) நிறைவு பெற்றுள்ளது.

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு முதல் இதுவரை 7 ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தற்போது நடைபெறப் போவது 8ஆவது ஜனாதிபதித் தேர்தல் ஆகும்.

பாராளுமன்ற அதிகாரம் கொண்ட இலங்கையின் ஆட்சி முறை, 1978ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையாக மாற்றப்பட்டது.

இதன்படி, கடந்த 7 ஜனாதிபதித் தேர்தல்களையும் விட இந்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முற்றிலும் மாறுப்பட்ட, பலரும் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் பதிவாகியுள்ள ஒரு தேர்தலாக மாற்றம் பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 10 முக்கிய விடயங்கள் வருமாறு:

1. ஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவர், ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும்.

2. இலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்) அதிகளவிலான வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (41 வேட்புமனுக்கள்)

3. அதிநீளமான வாக்குச்சீட்டைக் கொண்ட ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகின்றது. (2 அடி நீளத்தை விடவும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது)

4. இலங்கை வரலாற்றில் அதிக செலவினத்தை கொண்ட ஜனாதிபதி தேர்தல் இதுவாகும் (400 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்படவுள்ளது)

5. வாக்குப் பெட்டிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.

6. 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதற் தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். (1999ஆம் ஆண்டு தேர்தலில் இறுதியாக பெண்கள் போட்டியிட்டிருந்தனர்)

7. இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் போட்டியிடும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். (சுப்ரமணியம் குணரத்னம்)

8. ஜனாதிபதி ஆட்சியிலுள்ள பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடாத முதலாவது ஜனாதிபதித் தேர்தல்.

9. சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவின் கீழ் நடத்தப்படும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இது. (இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டன)

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நடுநிலையுடன் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு அமைச்சராக மற்றும் அமைச்சரவையின் பிரதானியாக தமது கடமைகளை தேர்தல் காலத்தில் உறுதிப்படுத்துவதற்கு இந்த முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளார்.

இதன் காரணமாக கட்சியின் பதில் தலைவராக முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சு.கவின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு, மருதானை டார்லி வீதியில் அமைந்துள்ள சு.கவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு ஜனநாயகத் தலைவர். 2015ஆம் ஆண்டைப்போன்று இம்முறையும் ஜனநாயக ரீதியான தீர்மானமொன்றை அவர் எடுத்துள்ளார்.

இடதுசாரி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஆதரவை அவர் வழங்கியுள்ளார். இத்தேர்தலில் அவர் நடுநிலையாகச் செயற்பட முடிவெடுத்துள்ளார்.

அதன் காரணமாக எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதிவரை எமது கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ செயற்படவுள்ளார்.

அத்துடன், தேர்தலை வழிநடத்த 15 பேர் கொண்ட அரசியல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு பொதுஜன பெரமுனவுடன் இணைந்து அரசியல் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் எவருக்கும் எதிரானதல்ல. நாட்டின் ஜனநாயகத்தையும் சட்டத்தையும் உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், கொழும்பு காலி முகத்திடலில் (கோல்பேஸ்) இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இது ஒரு சவாலான கூட்டமாகும் என அறியமுடிகின்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதன் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை அனுராதபுரத்தில் நேற்று (09) ஆரம்பித்தது.

அதில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, உள்ளிட்ட பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

அதுமட்டுமன்றி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும் கோத்தாவுக்கு ஆதரவளித்து அந்த மேடையில் ஏறினர்.

மக்கள் தேசிய சக்தி, அதன் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்றுமுன்தினம் (09) நடத்தியது. 

இந்நிலையில், காலி முகத்திடலை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கடந்த மே தினத்தன்று பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டத்தை களமிறக்கியது.

அதேபோல, மக்கள் தேசிய சக்தியின் வேட்பாளரை  அறிவிப்பதற்காக, ஜே.வி.பியினால் ஏற்பாடு செய்தியிருந்த கூட்டத்திலும் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டம்,  பெரும் திரளான மக்கள் கூட்டத்தை காண்பிக்க வேண்டும்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது கூட்டத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர், பங்கேற்பர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி,  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளமையால் பலரும் அதிருப்தி கொண்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ களமிறங்கும் “அன்னம்” சின்னத்துக்கு ஆதரவளித்து களமிறங்குவதற்கு தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

 

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்தை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளைச்செய்திருப்பது “மொட்டு” கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷவே என மிக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை பிரசாரங்களின் போது மிக மோசமான முறையில் தாக்குவதே பெசில் ராஜபக்ஷவினால் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாகும் என்றும், இதன் ஊடாக சிங்கள மக்களைக் கோபமடையச் செய்து கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சாதகமான சூழ்நிலையினைப் பெற்றுக் கொள்வதற்கான தந்திர நடவடிக்கையே இது என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவாஜிலிங்கம் சுமார் 50 ஆயிரம் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் என கணிப்பீடு செய்துள்ள பெசில் ராஜபக்ஷ, அவருடனான அனைத்து ஒருங்கிணைப்புக்களையும் ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிரிபால அமரசிங்கவிடம் ஒப்படைத்துள்ளார்.  பெசில் ராஜபக்ஷவின் வடக்கு கிழக்கின் பிரதான ஒருங்கிணைப்பாளரான சிரிபால அமரசிங்க, இம்முறை ஜனாதிபதி தோ்தலில் ஒரு டம்மி வேட்பாளராகப் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மீறி பௌத்த பிக்கு ஒருவரின் இறுதிக்கிரியைகளை மேற்கொண்டமை தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில், சம்பந்தன் எம்.பி., 27/2ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கிணங்க நேற்று சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இதன்போது நீதிமன்ற தீர்ப்பை மீறி செயற்பட்ட அதிகாரிகள் மற்றும் சட்டம்,- ஒழுங்கை நிலைநாட்ட தவறியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

கொழும்பில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து நீதிமன்ற தீர்ப்பை மீறி தன்னிச்சையாக செயற்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

மேற்படி விவகாரம் காரணமாகப் பொது மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சம்பந்தன் எம்பி, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்:

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி இந்து ஆலயம் மிகவும் பழமையானது. எனினும் பௌத்த தேரர் ஒருவரால் அப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இந்துக்கள் கோவிலுக்கு செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

அங்கு விகாரை கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் அதனை நிறுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பௌத்த பிக்கு மரணமடைந்ததால் அவரது பூதவுடலை இந்து கோயிலுக்கு அருகாமையில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பதிலளிப்பதற்கு உரிய அமைச்சர் இல்லை.

அவர் வருகைதந்ததும், அடுத்த அமர்வில் பதிலளிப்பார் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடவான அமைச்சர். கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

 

 

அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு அவரை அடக்கம் செய்யக் கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனையடுத்து ஏற்கனவே குற்றம் ஒன்றிற்காக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை பெற்ற கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பிலிருந்து அங்குவந்து நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி அவரது ஆதரவாளர்களுடன் இந்து கோயிலுக்கு அருகாமையில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்தார்.

எனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி செயல்பட்ட அவருக்கு எதிராக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறித்த பௌத்த தேரரின் இறுதிக் கிரியையின் போது அங்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய அதிகாரிகள் அதனை செய்யாமல் மௌனம் காத்தனர்.

இந்தச் செயற்பாடுகளின் போது அங்கு சமூகமளித்திருந்த சட்டத்தரணிகள் கூட தாக்கப்பட்டுள்ளனர். அங்கு குழுமியிருந்த அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டவர்களைத் தடுக்கத் தவறி விட்டனர். இது இந்து மக்களின் உரிமையை மீறும் செயலாகும். இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது

இது தொடர்பில் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டோருக்கெதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

வாக்குப் பெட்டிகள் மீள் தயாரிப்பு;  வெளிநாட்டிலிருந்தும் இறக்குமதி

நடுநிலை தவறக் கூடாதென  ஊடகங்களுக்கு எச்சரிக்கை

18ஆம் திகதியே உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் சாத்தியம்

நோயாளர்கள், கைதிகள், நாட்டாமையினர்

முன்கூட்டியே வாக்களிக்க யோசனை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செய்திகளைப் பிரசுரிப்பதிலும் வெளியிடுவதிலும் நடுநிலையைப் பேணுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு நேற்று (08) கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார்.

பக்கச்சார்பான செய்திகள் வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட அவர், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படுமென்றும் எச்சரித்தார்.

கொழும்பு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தலைமையகத்தில் நேற்று பத்திரிகை ஆசிரியர்களையும் இலத்திரனியல் ஊடகங்களின்

முக்கியஸ்தர்களையும் சந்தித்த அவர், ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பாக ஊடகங்களின் முக்கிய பொறுப்புகள் குறித்து விளக்கமளித்தார்.

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வேலைப்பளுவும் செலவினமும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.

விசேடமாக, வாக்குச் சீட்டு பற்றிக் குறிப்பிட்ட அவர், வழமைக்கு மாறாக இம்முறை 26 அங்குலம் நீளமுள்ள வாக்குச்சீட்டை அச்சிட வேண்டியுள்ளதாகவும் அதனை அச்சடிப்பதற்காக அரச அச்சகத் திணைக்களத்திற்குப் பொறுப்பளிக்கப்படுள்ளதாகவும் கூறினார்.

கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதனால், வாக்களிப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்படும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் வாக்குச் சீட்டின் அளவுக்கு ஏற்ப வாக்குப் பெட்டிகளையும் மீள வடிவமைக்க வேண்டியிருப்பதாகவும் தேவைப்படின் வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்ரிக் பெட்டிகளைத் தருவிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வழமையைப் போலல்லாது வாக்களிப்பு நிலையங்களை இடவசதியைக் கொண்டதாகவும் அமைக்க வேண்டும். அதேபோன்று வாக்குகளை எண்ணும் நிலையங்களும் அவ்வாறு வசதி கொண்டவையாக இருக்க வேண்டும்.

வாக்குப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், வாக்களிப்பு நிலைய செயலணிகள் உப செயலணிகள் போன்றவற்றை அதிகரிக்கும் தேவையும் ஏற்பட்டுள்ளது.

வாக்குகள் எண்ணும் பணி தாமதமாகும் என்பதால், செயலணிகளுக்கான நலன்புரி விடயங்கள், போக்குவரத்து வசதிககள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மின்சாரம், நீர், தொலைபேசி போன்ற பொது வசதிகளுக்கான செலவும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு மதிப்பிடப்பட்டதைவிடவும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது என்றும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். எனினும், செலவுத் தொகையை 500 கோடி ரூபாய்க்கு மட்டுப்படுத்துவதற்குத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு எதிர்பார்ப்பதைவிடத் தாமதமாகும் என்று குறிப்பிட்ட ஆணைக்குழுவின் தலைவர், சிலவேளை, நவம்பர் 18ஆம் திகதி காலையிலேயே இறுதி முடிவை எதிர்பார்க்க முடியும். கடந்த தேர்தலில் மறுநாள் நண்பகலிலேயே புதிய ஜனாதிபதியை அழைக்கக்கூடியதாகவிருந்தது.

ஆனால், இம்முறை அது சாத்தியமாகாது என்றார்.

அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணத்தால், இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலானது 1970களின் தேர்தல் நடைமுறைக்குப் பின்னோக்கிச் சென்றிருப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இது இவ்விதமிருக்க, ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளர்கள், சிறைகளிலிருக்கும் கைதிகள், கூலித்தொழிலாளர்களான நாட்டாமைகள் ஆகியோர் வாக்குகளை முன்கூட்டியே பதிவுசெய்யும் வகையில், யோசனை முன்வைக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

அரசாங்க உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உட்படப் பல்வேறு உயர் மட்டங்களில் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களித்து வருகின்றனர். அதுபோல், மேற்குறிப்பிடப்பட்ட நோயாளர்கள், கைதிகள், நாட்டாமைகள் ஆகியோர் வாக்களிக்கவும் ஏற்பாடுகளைச் செய்ய உத்தேசித்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறி னார். (ரு,வி)

 

© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd