web log free
July 26, 2021
editor

editor

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

அவர், கட்டுப்பணத்தை இன்று (3) செலுத்துவார் என அறியமுடிகின்றது. 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆரம்பகால உறுப்பினரான குமார் வெல்கம, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக நியமித்ததன் பின்னர் பெரமுனவிலிருந்து வெளியேறினார்.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வேட்பாளரொருவரை நியமிக்கவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மட்டுமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்ற பலரும், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர்களான அத்தாவுட செனவிரத்ன மற்றும் டி.கே.பி ஏக்கநாயக்க ஆகிய இருவரும் சஜித் பிரேமதாஸவுடன் நேற்று (02) இணைந்துகொண்டனர்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமேயும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை கைவிட்டு, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.

அந்த செய்திகளை மறுத்துள்ள புஞ்சிநிலமே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட தலைவராக இருந்து கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவின் திருமண வைபவம் காலிமுகத்திடல் ஹோட்டலில் இன்றுக்காலை 9.30க்கு இடம்பெறவுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றிருந்த நிலையில், யோசித்த ராஜபக்ஷ, நதீஷா ஜயசேகரவை கடந்த ஜூலை மாதம் பதிவு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்தின் பின்னர், எதிர்வரும் 7ஆம் திகதியன்று, வீரக்கெட்டிய மெதமுலன வீட்டுக்கு மறுவீடு செல்வர். அதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு வைபவங்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் மிகநெருங்கிய உறவினர்கள், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் லெப்டினனட் யோஷித, சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தார். பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், யோஷித்த ராஜபக்ஷ, கடற்படையில் மீண்டும் இணைத்துகொள்ளப்பட்டார்.

கடற்படையின் லெப்டினனட் யோஷித ராஜபக்ஷ, தற்காலிகமாக லெப்டினனட் கொமாண்டராக பதிவியுர்த்தப்பட்டு கடற்படை தலைமையகத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

திருமண வைபவத்தின் போது, கடற்படையின் “பண்பாட்டு முறையை” பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, கடற்படையில் அவர், மீளவும் இணைத்துகொள்ளப்பட்டார் என அறியமுடிகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன், கடற்படையின் கட்டளைகளுக்கு அமைவாகவே, இந்த “பண்பாட்டு முறை” நடத்தப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

அவருடன் பணிபுரிந்தவர்கள் லெப்டினனட் கொமாண்டர்களாக நிரந்தரமாக பதவியுயர்த்தப்பட்டுள்ள நிலையில், யோஷித ராஜபக்ஷ தற்காலிகமாக லெப்டினனட் கொமாண்டராக பதிவியுர்த்தப்பட்டுள்ளார்.

குறித்த பதவிக்கு தேவையான அடிப்படை தகுதிகளை நிறைவுசெய்த பின்னர், நிலையான லெப்டினனட் கொமாண்டராக அவர், எதிர்காலத்தில் பதவியுயர்த்தப்படுவார் என்று கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

 
தான் ஜனாதிபதியானால் தனக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை நாட்டின் வறுமையை நீக்க வழங்குவேன். ஜனாதிபதி மாளிகையை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றுவேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
 
கொழும்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று (02) நடாத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
 
"அமைச்சருக்கான கொடுப்பனவு, சம்பளம், இதர கொடுப்பனவுகளை நான் பெற்றுக்கொள்ளவில்லை. வீட்டு வாடகையைக் கூட பெற்றுக்கொள்ளவில்லை” என்றார்.
 
பொதுமக்களின் துன்பங்களை நன்கு அறிந்த அவர்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்வினை ஆட்சியாளர்கள் வாழ்கின்றனர் என்றார். அனைத்து தரப்பினருக்கும் ஒரு முன்னுதாரணமான தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளளேன்” என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
 
 
 

கோத்தாவின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (02) இடம்பெற்ற, மனுக்கள் மீதான விசாரணையின் போது, முன்வைக்கப்பட்ட முக்கியமான வாதங்களின் சுருக்கம்.

மனுதாரர்:

அமைச்சரவை கலைக்கப்பட்டதன் பின்னர், எந்தவொரு சான்றிதழிலும் அமைச்சர்கள் கையொப்படமிடமுடியாது. அவ்வாறு இடப்படும் கையொப்பம் செல்லுபடியாகாது.

ஜனாதிபதிக்கு, அமைச்சர்களுக்கான அதிகாரம் இல்லை. அமைச்சரவையை நிறுவியதன் பின்னரே, ஜனாதிபதிக்கு அவர் வகிக்கும் அமைச்சருக்கான அதிகாரம் உள்ளது. ஆகையால், கோத்தாவுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் சட்டரீதியற்றது.

முக்கிய பகுதிகள்

1.மஹிந்த ராஜபக்ஷ, 2015 நவம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர் பிரதமர்.

2.ஜனாதிபதியாக 2005 நவம்பர் 18 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.

3.அமைச்சரவை கலைக்கப்பட்டது. அமைச்சுக்களின் செயலாளர்களின் பதவி வலிதற்றதாக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் செயற்பாடுகளும் முடங்கின.

4.கோத்தாவின் இரட்டை பிரஜைவுரிமை தொடர்பிலான சான்றிதழ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், 2005 நவம்பர் 21 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

5.புதிய அமைச்சரவை, 2005 ஆம் ஆண்டு டிசெம்பர் 8 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

சட்டமா அதிபரின் பதில் வாதம்

அமைச்சரவை விடுமுறையில் இருக்கும் போது, ஜனாதிபதி தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தின் பிரகாரமும் அரசியலமைப்பின் பிரகாரமும் செயற்படமுடியும். அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

இரட்டை பிரஜாவுரிமைக்கான சான்றிதழை, விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரே கைச்சாத்திடவேண்டும். எனினும், ஜனாதிபதியினால் கைச்சாத்திட்டதன் பின்னர், அந்த விண்ணப்பத்தை அந்த அமைச்சர் சமர்ப்பிக்கலாம் என்றார்.

வழக்கு விசாரணை இன்று (3) பிற்பகல் 1.30 வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மருதானை சந்தியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதை அடுத்து அங்கு, ஆயுதமேந்திய பொலிஸார் மேலதிக பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுசரணை வழங்கும் வகையில்,  பாரிய பதாகைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

சஜித்துக்கு ஆதரவான பதைகைகளில் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மற்றொன்று, ஐக்கிய தேசியக் கட்சியின்  மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சி.வை. ராமின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு பாரிய பதாகைகளும், கிழிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, அங்கு ஒன்றுதிரண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரே இவ்வாறு அட்டகாசம் செய்தனர் என பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர், கிழிக்கப்பட்ட இடங்களை ஒட்டு நடவடிக்கைகளை ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

எனது தந்தையின் வெற்றிக்கும் தந்தைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை முறியடிப்பதற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒத்துழைப்பு வழங்கியதுபோல,

தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிக்கின்றேன்” என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதை அடுத்தே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளை 3ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என, பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளன என அறிவித்த அரசாங்க தகவல் திணைக்களம், நாளைக்கு பொது விடுமுறை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிவிருக்கும் சகல வேட்பாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவில், இன்று (02) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள், கட்டுப்பணம் செலுத்தியிருக்கும் சுயேட்சைக்குழுக்கள், போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளோர். அக்கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் பிரதிநிதிகளே இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான சட்டத்திட்டங்கள், விதிமுறைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் செயற்பாடுகளுக்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளன. 

முஸ்லிம் பெண்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 10 இளைஞர்களையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் இருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர்கள், பொலிஸாரின் கண்களுக்கு மண்ணை தூவி தலைமறைவாகவிருந்த போதிலும், மேல்மாகாண தெற்கு குற்றப்பிரிவினாரால் நேற்று (01) கைதுசெய்யப்பட்டனர். 

சிங்கள இனத்தைச் சேர்ந்த இளைஞனை திருமணம் முடித்துவிட்டார் என்றக் குற்றச்சாட்டிலேயே அந்தப் பெண்ணின் மீதும், அவரது தயார் மீதும் மேற்படி குழுவினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த மேற்படி சந்தேகநபர்கள், அந்த பெண்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், வீட்டிலிருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

இதுதொடர்பில், மார்ச் மாதம் 24ஆம் திகதி பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd