web log free
May 08, 2021
editor

editor

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளை மூடுகின்ற முடிவுக்கு கல்வி அமைச்சு இதுவரையில் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை சில சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைவாக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

பாடசாலைகளின் அதிபர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் பாடசாலைகளை நடத்தும் விதம் குறித்து திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகம்கொடுக்கும் விதம் குறித்து, கடந்த 23ஆம் திகதி, வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டலுக்கு அமைய, 50 வீத மாணவர்களுடன் பாடசாலைகளை நடத்திச் செல்வதற்கு எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலதிக வகுப்புக்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி நடவடிக்கையை தொடர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

 

நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட லிந்துலை – அக்கரப்பத்தனை டயகம பிரதான வீதியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின்  மூலம் அபிவிருத்தி  செய்வதற்காக பணிகள் இன்று (25) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமைய லிந்துலை – அக்கரப்பத்தனை டயகம பிரதான வீதியில் முதற்கட்டமாக சுமார் 6.5 கிலோ மீற்றர் தூரம் 404 மில்லியன் ரூபா செலவில் பாதையினை அகலப்படுத்தி காபட் இட்டு புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு” எனும் தொனிப்பொருளில், 100,00 கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் பல வீதிகள் காப்பட் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் லிந்துலை – டயகம வீதியை காப்பட் செய்து அபிவிருத்தி செய்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழிகாட்டலில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன் பங்கேற்பில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேற்படி முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை, பிரதேச சபை தலைவர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

கரைச்சி பிரதேச சபையினால் பன்நாட்டு நூல்கள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில்  இந்நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட மின்சார சபையின் பிரதம பொறியாளர் ஜீவிதன்  அவர்கள் கலந்து கொண்டார்

விருந்தினர்களாக கோட்டக்கல்வி அலுவலர் தர்மரட்ணம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் கிரிதரன், ஜெயமாருதி  ஓய்வு நிலை அதிபர்கள் சோதிநாதன் மற்றும் கனகரட்ணம் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் திருமதி. அன்னலிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் நூலக வாசகர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வீதி விபத்தில் அர்ஜென்டினா போக்‍குவரத்து அமைச்சர் காலமானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அர்ஜென்டினா போக்‍குவரத்து அமைச்சராக பதவி வகித்து வந்த மரியோ மியோனி நேற்றிரவு (23)  ஜுனின் நகருக்‍கு காரில் சென்றுகொண்டிருந்தார். அவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் போக்‍குவரத்து அமைச்சராக பதவி வகித்துவந்தார். நேற்றிரவு அவர் சென்ற கார் நெடுஞ்சாலையில் பயணித்தபோது, எதிர்பாதாராத சூழ்நிலையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் தலைகீழாகக்‍ கவிழ்ந்ததில் படுகாயமடைந்த அமைச்சர் மரியோ மினோனி இந்த விபத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மிகவும் திறமையாகவும், நேர்மையாகவும் பணியாற்றிய அவரது இழப்பு அர்ஜென்டினாவுக்‍கு பேரிழப்பாகும் என்று அதிபர் அல்பெர்ட்டோ பெர்ணாண்டஸ் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி, ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையினால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து குறித்த பகுதிக்கு அழைத்து வரப்பட்ட  வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களால் சிறுத்தை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் நாகராஜா செந்தில்குமரன் என்பவரது குடியிருப்புக்குள்ளேயே இவ்வாறு சிறுத்தை நுழைந்துள்ளது. குறித்த நபரின் வீட்டு வளர்ப்பு நாய் வழமைக்கு மாறாக எச்சரிக்கை ஒலி எழுப்பியதற்கு அமைவாக குறித்த நபர் சுற்று சூழலை பார்வையிட்டு்ளார்.

நாய் குரைக்கு திசையில் குறித்த சிறுத்தை அச்சத்தின் மத்தியில் மரத்தின் மீது ஏறி இருப்பதை அவதானித்த அவர், குறித்த விடயம் தொடர்பில் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை அடுத்து குறித்த பகுதியில் படையினர் சிறுத்தையை அவதானித்ததுடன், சம்பவம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து, அங்கு வருகை தந்த வன ஜீவராசி திணைக்களத்தினர் குறித் சிறுத்தையை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டதுடன், நீண்ட முயற்சியின் பின்னர் சிறுத்தை வெளியேறியது.

குறித்த பகுதி நகரை அண்மித்த பகுதியாக காணப்படும் நிலையில் அப்பகுதிக்கு சிறுத்தையின் பிரவேசம் தொடர்பில் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கனகாம்பிகை பகுதியின் ஊடாக குறித்த சிறுத்தை கிராமத்திற்குள் நுழைந்துள்ளது.

குறித்த சிறுத்தையினால் மனிதர்களிற்கு நேரடியான பாதிப்பு ஏற்படாது என வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், கால்நடைகள், சிறுவர்கள் உள்ள பகுதியில் இவ்வாறு சிறுத்தை நுழைந்தமை தொடர்பில் அப்பிரதேசத்தில் மக்கள் மத்தியில் அச்சம் காணப்படுகின்றது.

 

நாடு ஓரே இடத்தில் ஸ்தம்பித்து நின்று விடாது பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என மகாசங்கத்தினர் தெரிவித்தனர்.

பௌத்த ஆலோசனை சபை கூட்டம் நேற்று(23) பிற்பகல் 10வது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது கொழும்பு துறைமுக நகர்த் திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதன் பின்னர் தேரர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இத்திட்டம் தொடர்பாக விரிவாக தெளிவுபடுத்தியதுடன் பொருளாதாரத்திற்கும் நாட்டுக்கும் கிடைக்கும் பயன்கள் பற்றியும் கருத்து தெரிவித்தார்.

நில அளவினை விரிவுபடுத்தி புதிய முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல் ஒரு நாடு என்ற வகையில் பெற்றுக்கொள்ளும் பாரிய வெற்றியாகும். தவறான கருத்துக்களை பரப்பி அனைத்தையும் எதிர்ப்பதற்கு பதிலாக ஒரு தேசமாக முன்னேறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ் அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக மக்களுக்கு சரியான தெளிவை வழங்கி, அதற்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேரர்கள் சுட்டிக்காட்டினர்.

கொவிட் 19 புதிய உருமாற்றம், சுகாதார துறையின் ஆலோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் மகாசங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார்.

புத்தபெருமான், திரிபீடகம் மற்றும் பௌத்த புண்ணிய தலங்கள் குறித்து தவறான கருத்துக்களை பரப்புவோர் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்ட குழு தமது பரிந்துரைகளை ஆலோசனை சபைக்கு முன்வைத்தது.

எதிர்வரும் கூட்டத்தில் இது தொடர்பாக மகாசங்கத்தினரின் கருத்துக்களை குழுவிடம் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

பௌத்த ஆலோசனை சபையின் உறுப்பினர்களான மகாசங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் இந்த பௌத்த ஆலோசனை சபை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரான ரியாத் பதியுதீன் ஆகியோர் இன்று(24) அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கொழும்பிலுள்ள அவர்களது வீட்டில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியமை போன்ற குற்றச்சாட்டின்  அடிப்படையிலேயே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (23) முற்பகல் பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமர் அலுவலத்தில் வைத்து குறிப்பிட்டார்.

பிரகதி வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விரிவான கலந்துரையாடலொன்றின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நிலவும் சவால் மிகுந்த சூழ்நிலைக்கு மத்தியில் அரச வங்கி முறையை வலுவாக பராமரித்தல் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இச்சந்திப்பு இடம்பெற்றது.

1996ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்ட மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு, 2014ஆம் ஆண்டில் அதிமேதகு ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மீண்டும் பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் பிரகதி வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி பாராட்டினர்.

ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் தொடர்ந்து நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்தும் இதன்போது பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் அரச வங்கிகளில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்க்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார்.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, பிரதமரின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பிரியந்த ரத்நாயக்க, பிரகதி வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் நிசாந்த சமரசிங்க, தலைமை செயலாளர் ஏ.கே.பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட இராணுவத்தினர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற போதிலும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றில் இன்றைய தினம்(23) உரை நிகழ்த்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது பழிவாங்கலில் ஈடுபடும் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளில் கூட இடம்பெற்றமைக்கான வரலாறு இல்லை என குறிப்பிட்டார்.

நுவரெலியா, இராகலை மாகுடுகல - கிளன்டவன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (23) முற்பகல் நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் இராகலை சூரியகாந்தி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கான தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத மலையக அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவற்றை வலியுறுத்தும் வகையிலான பதாதைகளையும் தோட்டத் தொழிலாளர்கள் ஏந்தியிருந்தனர்.

உரிய பராமரிப்பின்மையால் மாகுடுகல - கிளன்டவன் தோட்டம் காடாக மாறியுள்ளது.  இதனால், தேயிலை பயிர்ச்செய்கை அழிவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, காட்டை சுத்தப்படுத்தி தருமாறும், நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழிலாளர்கள் கடந்த இரு மாதங்களாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இத்தோட்டங்களுக்கு சென்ற பல அரசியல் பிரமுகர்களும், உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்தனர். அந்த உறுதிமொழி இன்றளவிலும் நிறைவேற்றப்படவில்லை. தோட்டத்தை பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகமும் அசமந்தமாக செயற்படுகின்றது. இந்நிலையிலேயே தமக்கு விரைவில் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

 

 

© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd