web log free
September 14, 2024
kumar

kumar

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைமைத்துவத்திற்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கட்சியின் தலைமைப் பதவிக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.

அடுத்த தலைவராக பசில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருத்து தெரிவித்த வேளையில், கட்சியின் இளம் உறுப்பினர்களால் நாமல் ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அடுத்த தலைவர் தொடர்பில் பொதுஜன பெரமுனவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட இரண்டு பெயர்களுக்கு மேலதிகமாக அமைச்சரவையின் பிரதம அமைச்சர் ஒருவரின் பெயரும் கட்சித் தலைமைக்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1988 இல் ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்தமைக்காக பெருவின் முன்னாள் உள்விவகார அமைச்சரும் இரண்டு முறைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான டேனியல் உரெஸ்டிக்கு (Daniel Urresti) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டு 34 வருடங்களின் பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிக மோசமான சிவில் யுத்தத்தின் போது, மோதல் உக்கிரமடைந்த நிலையில் ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக டேனியல் உரெஸ்டிக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறியமை தொடர்பில் ஆராய்ந்த ஊடகவியலாளரான Bustios-உம் மற்றுமொரு ஊடகவியலாளரான Eduardo Rojas-உம் தாக்குதலுக்கு உள்ளானதுடன், காயமடைந்த Rojas அந்த இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டாலும், Bustios பலத்த காயமடைந்து அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

பின்னர் இராணுவ அதிகாரிகள் அவரின் உடம்பில் வெடிபொருட்களை போட்டு வெடிக்கச் செய்து கொலை செய்தனர். 

அந்த வேளையில், புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பான கெப்டனாக இருந்த பெருவின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் டேனியெல் உரெஸ்டி 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் Bustios-ஐ கொலை செய்த சம்பவத்தில் தொடர்புபட்டிருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பெருவில் நீண்ட காலம் அரசியல் ஸ்திரமற்றநிலைமை காணப்பட்டதுடன், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் வரை அந்நாட்டில் ஏழு ஜனாதிபதிகள் பதவி வகித்துள்ளதுடன், சில ஜனாதிபதிகளின் பதவிக்காலம் ஒரு சில நாட்களாக மட்டுமே பதிவாகியுள்ளன. 

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் குகதாசன் சகிதமாக திருகோணமலை, புல்மோட்டை பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தோம்.

திருகோணமலை, புல்மோட்டையில் பிக்குவின் அட்டகாசங்கள் குறித்து கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதனைத் தொடர்ந்து இப்பிரதேச மக்கள், இந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து தங்களுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கூறுவதற்கு நீங்களும் வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததற்கு இணங்க நாம் அங்கு விஜயத்தை மேற்கொண்டோம்.

சில நேரங்களில் பிக்குமார்கள் நேரடியாக புல்மோட்டை மக்களிடம் வந்து துப்பாக்கிகளைக் கொண்டு அச்சுறுத்துவதும், மிரட்டுவது மற்றும் கற்களை போடுவது போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றது.

வடக்கு – கிழக்கிலே தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் அனைத்து பிரதேசங்களிலுமே இது போன்ற விடயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நாங்கள் இவ்விடயங்களுக்கு எதிராகப் போராட்டங்களை செய்திருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட ஒரு இடத்தில் இதே பிக்கு இரவு நேரத்தில் இராணுவ பாதுகாப்புடன் வந்து காணி அபகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை விரட்டியடித்தோம். இது போன்ற அடாவடி பிக்குகளிடம் இருந்து எங்கள் காணியைக் காப்பாற்ற வேண்டும். இவற்றுக்கான தகுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- சாணக்கியன் - பாராளுமன்ற உறுப்பினர் 

ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரே கூட்டணிக்குள் கொண்டுவர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையே என  நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விவாதத்தில் எந்த ஒரு கட்டத்திலும் பிரதமரின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும், அது குறித்த யோசனைகளை முன்வைப்பது மிகவும் தாமதமானது என்ற புரிதல் தனக்கு இருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டுகிறார்.

எனினும் இந்த கூட்டணி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து நல்ல பதில் கிடைக்காததால் விவாதம் நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஊடாக செய்தி அனுப்பியுள்ளதாக சில ஊடகங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் முற்றிலும் பொய்யானது என எம்.பி மனோ கணேசன் தெரிவித்தார். 

“மேலும் நான் தூதர் அல்ல. நல்லெண்ணத்துடனும் கருத்தியல் ரீதியாகவும் ஒரு விவாதத்தில் நடுநிலையாளராகத் தோன்றும் வாய்ப்பு இருந்தாலும் தூதுவராக நான் நடிக்க மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன மேலும் தெரிவித்தார்.

உதயமாகும் தமிழ், சிங்கள புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும் மகிழ்வும் நிறைந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு உதயமான சந்தர்ப்பத்தில் அனைவரும் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்ததுடன், அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்ததாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இப்புத்தாண்டில் அனைவருக்கும் சிறிய ஆறுதல் தருகின்ற சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அடுத்த புத்தாண்டில் இதனை விடவும் சௌபாக்கியத்தையும் செழிப்பையும் ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும், அனைவரும் ஒன்றிணைந்து ஒரே பாதையில் பயணித்தால் அந்த இலக்கு சாத்தியமாகும் எனவும் கூறியுள்ளார். 

இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் சங்கற்பம் கொண்டால் இந்த புத்தாண்டை மாத்திரமன்றி, எதிர்காலத்தையும் நலம் மிக்கதாக அமைத்துக்கொள்ள முடியும் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, நாடு முகங்கொடுத்துள்ள உணவு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், புத்தாண்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, விளைச்சலினால் நாட்டை செழிப்படையச் செய்வதற்காக விவசாய சமூகத்தினர் மேற்கொண்ட அர்ப்பணிப்புகளை, இந்த புத்தாண்டில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

தொற்றுநோய் பரவல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் ஆகியன அண்மைக்கால வரலாற்றில் கண்டிராத ஒன்று எனவும் 

இவற்றை மீண்டும் சந்திக்காதிருப்பதற்கும், அடுத்த தலைமுறைக்கு அவற்றை விட்டுச் செல்லாதிருப்பதற்கும், புதிய சிந்தனைகளால் வளம்பெற்ற இனிய புத்தாண்டு இன்று முதல் மலர வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்துக்கூறியுள்ளார்.

இருண்ட காலம் முடிவடைந்துவிட்டது எனும் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தின் அடிப்படையில், வளமான மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்காக நாட்டு மக்கள் உறுதியுடன் ஒன்றுதிரளும் வலிமையைப் பெற வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு, பல சவால்களுக்கு மத்தியில் புத்தாண்டு உதயமாகின்ற போதிலும், நாட்டுக்கும் மக்களுக்கும் சுபீட்சமும் ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்பதே, அனைத்து மக்களினதும் ஒரே நம்பிக்கை எனவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

சித்திரைப் புத்தாண்டு  இன்று (14) மலர்ந்துள்ளது.

"சோபகிருது" எனும் நாமத்தில் பிறந்துள்ள சித்திரைப் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். 

சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழ் வருடங்களை எமது முன்னோர்கள் அறுபதாக வகுத்துள்ளதுடன், பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய வரையில் அந்த அறுபது ஆண்டு பட்டியல் நீள்கிறது. 

படைத்தற்கடவுளான பிரம்மா இந்த அண்டத்தை சித்திரை மாதம் முதல் நாளில் படைத்ததாக புராணங்கள் பறைசாற்றுகின்றன.

மஹாவிஷ்ணு பத்து அவதாரங்களில் முதல் அவதாரமாக விளங்கும் மச்ச அவதாரமும் சித்திரை மாத வளர்பிறை திதியை அடுத்த மூன்றாவது நாள் நிகழ்ந்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று பிற்பகல் 02 மணி 3 நிமிடத்திலும் திருக்கணித பஞ்சாங்கப்படி 2 மணி 59 நிமிடத்திலும் மலரவுள்ளது. 

வருடப் பிறப்பின்போது தோஷ நச்சத்திரங்களுடையவர்கள் புண்ணிய காலத்தில் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து இயன்றளவு தான தருமங்களை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

முற்பகல் 10.03 தொடக்கம் மாலை 6.03 வரை புண்ணிய காலமாகும்.

சித்திரை புத்தாண்டு பிறப்பின்போது வௌ்ளை நிறமுள்ள பட்டாடை மற்றும் வௌ்ளை கரையமைந்த ஆடை அணிவது சிறந்தது என கூறப்பட்டுள்ளது. 

சித்திரைப் புத்தாண்டில் கைவிசேடமும் சிறப்பிடம் பெறுகின்றது.

புதிய வருடத்தில் கைவிசேடத்திற்குரிய நேரங்களாக 

15 ஆம் திகதி முற்பகல் 7.52 முதல் முற்பகல் 9.00 மணி வரையும்

16 ஆம் திகதி முற்பகல் 7.49 முதல் முற்பகல் 9.48 வரையும் கணிக்கப்பட்டுள்ளன.

சித்திரைப் புத்தாண்டுக்காக நாட்டின் பல பகுதிகளிலுள்ள மக்கள் இன்முகத்துடன் தயாராகி வருவதை அவதானிக்க முடிந்தது.

கேகாலை மாவட்டத்தில் சராசரியாக எட்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர் என்பதுடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் கேகாலை மாவட்டத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குரங்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தப் புள்ளிவிபரங்களின்படி, கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜிக விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் எப்பொழுதும் இவ்விடயம் கவனம் செலுத்தியும் இதுவரை தீர்வைக் காணவில்லை.

குறிப்பாக கேகாலையில் தென்னைச் செய்கை, வாழை உள்ளிட்ட பழச் செய்கைகள் குரங்குகளால் சேதமடைவதாகவும், இந்த நாட்களில் கேகாலையில் தேங்காய் ஒன்று 120 முதல் 130 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

கேகாலையில் ஆடு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அவற்றிற்கு உணவு கிடைக்காததாலும், வீடுகளுக்குள் குதித்து எடுத்துச் சென்ற காலங்களும் உண்டு என ஒருங்கிணைப்புக் குழுவில் தெரியவந்துள்ளது. 

சீனாவிற்கு வழங்கவுள்ள 100,000 இற்கும் அதிகமான குரங்குகளை கேகாலையில் இருந்து பிடிக்க வேண்டும் எனவும், அதற்கு காலவரையறையின்றி அதிகபட்ச ஆதரவை வழங்க முடியும் எனவும் கேகாலை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டத்திற்கும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் மாபெரும் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகள்.

1.அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

2.குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

3.இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

4.மட்டு. மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.

5.போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் அடையாள உண்ணாநோன்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எம் மரபுரிமைகளை வென்றெடுக்க ஆன்மீகத் தலைவர்கள், ஆலய அறங்காவலர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், சமுக மட்ட அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகம் ஆகியவற்றின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்படும்.

இந்த எழுச்சி போராட்டத்தின் மூலம் தமிழர் மரபுரிமைகளை வென்றெடுக்க தமிழ் மக்கள் திரண்டு வந்து பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் பல கால அவகாசங்கள் வழங்கப்பட்டு , ஏமாற்றப்பட்ட நிலையில் உரிய தீர்வு உடனடியாக வழங்கப்படாவிடுத்து தொடர் போராட்டங்களை பல்வேறு பரிணாமங்களில் முன்னெடுக்கப்படும் என்பதை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் இச்சந்தர்ப்பத்தில் ஆழமாக வலியுறுத்தி நிற்கின்றோம் என்றுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 11 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த ஆண்டு மே தினக் கொண்டாட்டத்தைப் புறக்கணிப்பதாக வெளியான செய்தியை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கட்சியின் கருத்துக்கு புறம்பாக செயற்படும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் மே தினமானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் பெருந்தொகையான மக்களின் பங்கேற்புடன் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்   தெரிவித்துள்ளார். 

பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகளை விரைவாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

நிதி அமைச்சில் நேற்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு அமைவாக, உள்நாட்டு சந்தையில் பாடசாலை புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகள் குறைக்கப்பட ​வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்தை மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்திற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார். 

புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகள் குறைவடையாத பட்சத்தில் அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்துள்ள நிலையில் புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளை கொள்வனவு செய்வதற்கு பெற்றோர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.