Print this page

மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் நாளை தகனம்

December 27, 2024

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து, 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 92) திடீர் உடல்நலக்குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், வயது மூப்பு, உடல்நல குறைவு, மூச்சு திணறல் ஆகிய காரணங்களால் மன்மோகன் சிங் சிகிச்சை நேற்று இரவு 9.51 மணிக்கு உயிரிழந்தார்.

இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்கு பின் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் நாளை (28) தகனம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இன்று (27) நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்.

அதேவேளை, மன்மோகன் சிங் மறைவையொட்டி பிரதமர் மோடி தலைமையில் இன்று (27) காலை 11 மணிக்கு மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுகிறது. இந்த கூட்டத்தில் மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.