Print this page

கைப்பந்து மைதானத்தில் குண்டுவெடிப்பு - 4 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பாக்லான் மாகாணம், டாலோ ஓ பர்பாக் மாவட்டத்தில் உள்ள கைப்பந்து மைதானத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை, உள்ளூர் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் போட்டியை கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை. சற்றும் எதிர்பாராதவிதத்தில் அங்கு பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது.

இந்த குண்டுவெடிப்பால் அந்த மைதானமே குலுங்கியது. போட்டியைக் காண வந்திருந்த ரசிகர்கள் பதற்றத்துடன் நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.

எனினும் இந்த குண்டுவெடிப்பில் உடல் சிதறி 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர்.

குண்டுவெடிப்பு நடந்த இடம், தலீபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.