Print this page

காஷ்மீர் தாக்குதலின் தொடர்பில் 23 சந்தேக நபர்கள் கைது

February 18, 2019

காஷ்மீரில் சென்ற வாரம் நடந்த கடுமையான தாக்குதலின் தொடர்பில், 23 சந்தேக நபர்களை இந்தியா தடுத்துவைத்துள்ளது. சம்பவத்தில் 40க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் Jaish-e-Mohammad தீவிரவாதக் குழுவுடன் தொடர்புகொண்டோரும் அடங்குவர். சென்ற வாரத் தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

அமைப்பின் தலைவர் முகமது உமைர் (Mohammed Umair) உள்ளிட்ட தீவிரவாதிகளைத் தேடிவருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

உமைர் அந்தத் தாக்குதலுக்கான சதித் திட்டத்தைத் தீட்டியதாக இந்திய அதிகாரிகள் நம்புகின்றனர். தாக்குதல் நடந்த வட்டாரத்திலேயே அவர் பதுங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.கைதான சந்தேக நபர்களிடம் இந்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Jaish-e-Mohammad உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் இடங்கொடுப்பதாக இந்தியா சாடியுள்ளது. அதனை நிராகரித்த பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளது.