Print this page

வடகொரியாவுடன் தொடந்து பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், வடகொரியாவின் அணுவாயுதக் களைவு தொடர்பில் அதனுடன் மேலும் பேச்சு நடத்தத் தயாராய் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன் (John Bolton) அதனைத் தெரிவித்தார்.

பியோங்யாங் அதன் முக்கிய உந்துகணைத் தளத்தை மீண்டும் கட்டிவருவதாகத் தகவல் வெளியான வேளையில், அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தகவல்கள் உறுதியானால், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் குறித்துத் தாம் மிகவும் ஏமாற்றம் அடைவதாக ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்தார்.

வியட்நாமில் இரு தலைவர்களும் சென்ற வாரம் நடத்திய உச்சநிலைச் சந்திப்பு திட்டமிட்டதற்கு முன்பாகவே முடிவுற்றது.

பியோங்யாங் மீதான தடைகளை நீக்குமளவு அது அணுவாயுதக் களைவில் முன்னேற்றம் காட்டவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி குறைகூறினார்.

கிட்டத்தட்ட அதே நேரத்தில் வடகொரியா அதன் ஏவுகணைத் திட்டத்தை மீண்டும் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

வடகொரியாவின் சோஹே (Sohae) உந்துகணை பாய்ச்சும் தளத்தில் மீண்டும் நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதை செயற்கைத் துணைக்கோளப் படங்கள் காட்டுகின்றன.

அதனையடுத்து, அமெரிக்க, தென்கொரிய அணுச்சக்திப் பேராளர்கள் வாஷிங்டனில் அவசரக் கூட்டத்தில் சந்தித்தனர்.

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையிலான பேச்சை முன்கூட்டியே மீண்டும் தொடங்குவதற்கான வழிகளில் அவர்களில் கவனம் செலுத்தினர்.

சந்திப்பில், வடகொரியாவுடன் அணுக்கமாக ஒத்துழைக்க இரு நாடுகளும் உறுதியளித்தன.

Last modified on Friday, 08 March 2019 02:29