Print this page

பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள்

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொண்ட கடும் கட்டுப்பாட்டு நடவடிக்‍கைகள் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக அங்கு கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து, பிரிட்டனில் நேற்று முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளன.

பிரிட்டனில் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவியதை அடுத்து, கடந்த மாதம் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. மக்‍களின் கடும் எதிர்ப்புக்‍கு இடையே முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடுமையான கட்டுப்பாடுகள் எதிரொலியாக பிரிட்டன் முழுவதுமாக கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. பிரிட்டனில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை 3,500ஆக குறைந்துள்ளது. மேலும் நேற்று 13 உயிரிழப்புகள் மட்டுமே பதிவானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து பிரிட்டனில் நேற்று முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. வணிக நிறுவனங்கள், கடைகள், பல்பொருள் அங்காடிகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்று பொருட்களை வாங்கி வருகின்றனர். மதுபான கூடங்கள் மற்றும் உணவகங்களிலும் மக்கள் கூட்டத்தை அதிகளவு காண முடிகிறது. தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் பொது இடங்களில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது.