Print this page

குவைத்தில் இலங்கை பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது உண்மையா

December 24, 2021

இலங்கை பெண் ஒருவருக்கு குவைத்தில் மரண தண்டனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் குவைத் பொலிஸாரின் உதவியுடன் அங்குள்ள இலங்கை தூதரக அதிகாரிகளால் அப்பெண் பாதுகாப்பாக நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை பிரஜையான கிருஷ்ணன் சிறியானி சந்திரலதா என்ற பெண் தொடர்பிலேயே சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளி தொடர்பில் குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் அவதானம் செலுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கூறுகையில், சம்பவம் தொடர்பில் கடந்த 21 ஆம் திகதி குவைத் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதோடு , சந்திரலதாவின் நிலைமை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கும் அவர்களது ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய குவைத் பொலிஸாரின் ஒத்துழைப்புக்கமைய , அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளால் சந்திரலதா பணிபுரிந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர் கடந்த 22 ஆம் திகதி குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்திரலதா பணிபுரியும் வீட்டு உரிமையாளர்கள் அவரின் இலங்கை பயணத்தை தாமதப்படுத்தியமையால் , நாடு திரும்புவதற்காக அவர் தனது பிள்ளைகளிடம் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தான் பணி புரிந்த வீட்டு உரிமையாளர்கள் தனக்கு உரிய நேரத்தில் சம்பளத்தை வழங்கியதாகவும் , அவர்களால் எவ்விதத்திலும் தான் அச்சுறுத்தலுக்கோ அல்லது துன்புறுத்தலுக்கோ உள்ளாக்கப்படவில்லை என்றும் சந்திரலதா உறுதிப்படுத்தியுள்ளதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கூறியுள்ளது.

Last modified on Friday, 24 December 2021 08:08