Print this page

ஹிஜாப் அணிந்து வாக்களிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

February 19, 2022

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க வந்தார்.

ஹிஜாப் அணிந்திருந்த அவர் வாக்கு செலுத்துவதற்காக வாக்கு எந்திரம் உள்ள பகுதிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த பா.ஜ.க. பூத் ஏஜெண்ட் கிரிராஜன், அந்த பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வாக்களிக்குமாறு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க. ஏஜெண்ட் கருத்துக்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

மேலும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சி ஏஜெண்ட்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குப்பதிவை புறக்கணித்து வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சிறிதுநேரம் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க பூத் ஏஜெண்ட் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

இதன் காரணமாக அல்அமீன் பள்ளியில் செயல்பட்டு வரும் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Last modified on Saturday, 19 February 2022 08:36