Print this page

விசாரணை முன்னேற்ற அறிக்கை கோரும் நீதிமன்றம்

December 22, 2022

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ஷிலானி பெரேரா  உத்தரவிட்டுள்ளார்.

பொரளை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்ட நீதவான், பொரளை பொலிஸாரால் நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏற்று விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எனவே மேலதிக விசாரணைகளை அந்த திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பொரளை பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் அடங்கிய கோப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொரளை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்ட நீதவான், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.