Print this page

ஜனாதிபதியின் முயற்சிக்கு முட்டுக்கட்டையிட்டு தேரர்கள் விடுத்துள்ள அறவிப்பு

February 02, 2023

நாட்டின் சுயாதீனத்தன்மை, ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை, எந்த வகையிலும் அமுல்படுத்தக்கூடாது என மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். 

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து நாட்டிற்குள் குழப்பத்தை தோற்றுவித்துள்ளதாக மகா நாயக்க தேரர்கள் கூறியுள்ளனர்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், புராதன, வரலாற்று சின்னங்கள், மத அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா நாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

நாட்டில் ஏற்படக்கூடிய சிக்கல், பாதகமான நிலையை கருத்திற்கொண்டே ஏற்கனவே ஜனாதிபதி பதவியை வகித்தவர்கள் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை தவிர்த்துக்கொண்டதாக  மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்களின் இறைமையை பாதுகாக்கும் பொறுப்புள்ள நிறைவேற்றதிகார ஜனாதிபதி, மத்திய அரசாங்கத்தின் இறைமையை சீர்குலைக்கும் இத்தகைய அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கின்றமை, மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுவதற்கான காரணமாக அமையும் எனவும் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவுகின்ற பொருளாதர நெருக்கடியினால் பிராந்திய, உலக வல்லரசுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான சில நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டாலும், நாட்டின் ஒருமைப்பாடு, சுயாதீனத் தன்மையை விபத்தில் ஆழ்த்தும் இத்தகைய பிரேரணைகளை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.