Print this page

நாட்டில் முஸ்லிம்களுக்கு ராஜபக்ஷக்களே அவமதிப்பை ஏற்படுத்தினர்!

February 15, 2023

இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பைச் செய்தது ராஜபக்சர்களே எனவும், கொவிட்காலத்தில் அடக்கமா அல்லது தகனமா என்ற விடயத்தில் அவர்கள் நினைத்தது போல் செயற்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புத்தளத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

போராட்டத்தின் மூலம் கோரப்பட்ட எந்த மாற்றமும் இது வரை எட்டப்படவில்லை எனவும், அகிம்சை ரீதியாக போராட்டத்தில் ஈடுபட்டவன் என்ற வகையில் இது குறித்து தாம் வருந்துவதாகவும், வன்முறையை விரும்பும் சிலஅரசியல் குழுக்கள் இந்நாட்டைப் பொறுப்பேற்கிறோம் எனக் கூறுவது நகைப்புக்குரியது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்றும் இந்நாட்டை ஆள்வது ராஜபக்ச நிழல் அரசாங்கமே என்பதனால், ராஜபக்சர்களினால் தூண்டப்பட்ட இனவாதத்தை அழித்து சகோதரத்துவம் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும், ராஜபக்சர்களின் இந்த நிழல் அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகின் பிற நாடுகள் நமக்குப் பின்னால் இருந்தாலும், இந்நாடுகள் இப்போது நம்மை விட முன்னேறியுள்ளதாகவும், நாமும் அந்த வழியில் பயணிக்க ஒரு புதிய தொடக்கத்திற்கு செல்ல வேண்டும் எனவும், புதிய தொழில்நுட்ப போக்குகள் மற்றும் திட்டங்கள் மூலம் இளைஞர்களை வலுவூட்டி நாட்டில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.