Print this page

தேர்தல் நடக்காது என்பதை உறுதி செய்யும் திணைக்கள முடிவுகள்

February 19, 2023

தபால் வாக்குச் சீட்டுக் குறியிடலை காலவரையின்றி ஒத்திவைக்கத் தேர்தல் ஆணையாளர் நாயகம் அனைத்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், அனைத்து மாவட்ட துணை, உதவித் தேர்தல் அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி, வரவிருக்கும் நிர்வாகப் பணிகள் குறித்து தொடர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து ஊழியர்களுக்கும் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பிரதான அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்பட வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ ஏதாவது விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால் அதற்கு தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.

தற்போது பணியில் உள்ள தற்காலிக உதவியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் சேவைகள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அலுவலக நேரத்திற்குப் பிறகு தற்காலிகமாக நிறுத்தப்படும்.

ஊழியர்களின் போக்குவரத்துக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட வாகனங்கள் அனைத்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தற்காலிகமாக விடுவிக்கப்பட வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த அலுவலகத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் எதிர்காலத்தில் அறிவுறுத்தல் வழங்கப்படுமெனவும் அதுவரை பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.