Print this page

வடக்கு கிழக்கு பகுதிகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால்

உத்தேச பயங்கரவாத எதிரப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் இன்று (25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த முழுமையான கடையடைப்பிற்கு 07 தமிழ் ​தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்திருந்த நிலையில் வடக்கு, கிழக்கு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், மக்கள் வீதியில் இறங்கி போராடுவதும் அரசுக்கு எதிரான சதி முயற்சியாக கருதப்பட்டு கைது செய்யப்படலாமென குறித்த கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன் வடக்கு - கிழக்கு தமிழர் பகுதிகளில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, வடக்கு கிழக்கு மாகாணங்களின் 08 மாவட்டங்களிலும் இன்று(25) முழுமையான கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உத்தேச பயங்கரவாத சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுவதாக  செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை எனவும் சந்தைகள் மூடப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்.தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஆகிய நகரங்கள் முற்றாக முடங்கின.

யாழ்.மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு சட்டத்தரணிகள் வருகை தராமையால் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததாக  செய்தியாளர் கூறினார்.

யாழ்.வலிகாமம் பகுதியிலும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பிற்கேற்ப முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (25) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில், தனியார் பஸ் சேவைகளும் இடம்பெறவில்லை.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவு குறைவாக காணப்பட்டதால், பாடசாலைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டதாக  செய்தியாளர் கூறினார்.

அரச திணைக்களங்கள் வழமை போன்று இயங்கிய போதும் சில உத்தியோகத்தர்கள், போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

கிளிநொச்சியில் மருந்தகங்கள், உணவகங்கள் தவிர பொதுச்சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

வவுனியாவின் பல பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன், மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைவடைந்ததாக  செய்தியாளர்கள் கூறினர்.

சந்தைகள் மூடப்பட்டுள்ளதால், விவசாயிகள் தமது உற்பத்திகளை வீதியில் வைத்து விற்பனை செய்வதை காணக்கூடியதாகவிருந்ததென  செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளான நெடுங்கேணி, செட்டிக்குளம், கனகராயன்குளம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளின் வழமையான செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்தன.

மன்னாரில் ஹர்த்தாலுக்கு ஆதரவாக அநேகமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.   

தனியார் போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளதுடன், பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டுள்ளது.

அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறுவதாக  செய்தியாளர் கூறினார்.

வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலை முன்னிட்டு திருகோணமலையிலும் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

பிரதேச செயலகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், சேவையை பெறுவதற்கு மக்கள் வருகை தரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பிலும் இன்று(25) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு - செங்கலடி பகுதியிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

மட்டக்களப்பு - சித்தாண்டி, கிரான், வாழைச்சேனை பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களும் இன்று (25) காலை முதல் மூடப்பட்டன.

அரச வங்கிகள் திறக்கப்பட்ட போதிலும், குறித்த பகுதிகளிலுள்ள தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டதாக  செய்தியாளர் கூறினார்.

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.