Print this page

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மீண்டும் பனிப்போர்

பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பாக சிரேஷ்ட பிரதி பொலீஸ் மா அதிபர்கள் இடையே மீண்டும் பனிப்போர் புதிய முகத்தில் தொடங்கியுள்ளதாக பொலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமையே இதற்குக் காரணம் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த நாட்களில் பொலிஸ் மா அதிபர் பதவியை பெற்றுக் கொள்வதற்காக சிலர் அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

ஆதரவைப் பெற முயற்சிக்கும் நபர்களில் பணிமூப்பு குறைவாக உள்ள அதிகாரிகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக பொலிஸ் மா அதிபர் பதவியை சிரேஷ்ட பிரதி பொலீஸ் மா அதிபர்  பெறுவார். அவர் பணி மூப்பு அடிப்படையில் உயர்ந்தவர்.

சாதாரண நடைமுறையின் கீழ், பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான பெயர் அல்லது பல பெயர்கள் ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

அந்தச் சபையின் ஒப்புதலுக்குப் பிறகு, பொருத்தமான பெயர் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு, அதன்படி புதிய பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி நியமிக்கிறார்.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கான பெயர் அல்லது பெயர்கள் எதுவும் ஜனாதிபதியிடமிருந்து பெறப்படவில்லை என அரசியலமைப்பு சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான ஒருவரின் பெயர் விரைவில் அரசியல் நிர்ணய சபைக்கு அனுப்பப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.