Print this page

தலதா மாளிகையை வான் வழியே வீடியோ செய்த சீன பிரஜைகள் கைது

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் உரிய அனுமதியின்றி ட்ரோன் கமராவை பறக்கவிட்ட சீன பிரஜைகள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சீன பிரஜைகள் இருவரும் இன்று (08) காலை ட்ரோன் கமராவை பறக்கவிட முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ட்ரோன் கமராவை கண்டி தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ளவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ தலதா மாளிகையோ அல்லது அது தொடர்பான பாதுகாக்கப்பட்ட வலயமோ காணப்படாததால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதனடிப்படையில், இருவரிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸாரின் சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.