Print this page

கைதான எம்பி விடுதலை

இன்று (07) காலை கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனது வீட்டில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை கைது செய்யப்பட்டார். 

அவரை கைது செய்ய கிளிநொச்சியில் இருந்து விசேட பொலிஸ் குழுவொன்று சென்றிருந்தது. 

இதன்போது, தன்னைக் கைது செய்வது சட்டவிரோதமானது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சபாநாயகரை தொடர்பு கொண்டு விடயத்தை தௌிவுபடுத்தினார்.

எனினும், பொலிஸார் அவரை கைது செய்து, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கிளிநொச்சிக்கு அழைத்துச்சென்றனர். 

இதேவேளை, மருதங்கேணி சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் செய்திருந்த முறைப்பாட்டிற்கு அமைய, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இன்றைய தினம் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். 

இன்று காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை 4 மணித்தியாலங்கள் அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக

யாழ். மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் த.கணகராஜ் குறிப்பிட்டார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வாக்குமூலம் பெறுவதற்காக யாழ். மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மருதங்கேணியில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி ஜெ.சற்குணதேவி, எஸ்.உதய சிவம் ஆகிய இருவருமே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.