Print this page

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் கிழக்கு ஆளுநர் முக்கிய சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் புது டில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

நெருக்கடியில் இருந்து இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு முயற்சிகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பாராட்டியதாக செந்தில் தொண்டமான் கூறினார். 

அத்துடன் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவென இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜெய் சங்கருக்கு கிழக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 

கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான இணைப்பை அபிவிருத்தி செய்தல், திருகோணமலை கைத்தொழில் பூங்காவில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்னுரிமை அளித்தல், கிழக்கு மாகாணத்தில் மின்சாரம் இன்றி வாழும் 15,000 குடும்பங்களுக்கு இந்திய மானியத்தில் சோலார் பேனல்களை ஒதுக்கீடு செய்வதற்கும், கோணேஸ்வரம் கோவிலை அபிவிருத்தி செய்தல்,  இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய இலங்கை அகதிகளுக்கான வீட்டுவசதி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள், ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், கிழக்கு மாகாணம் மற்றும் தோட்டப் பகுதிகளில் கணினி மற்றும் விஞ்ஞான ஆய்வகத்துடன் கூடிய பாடசாலைகளை மேம்படுத்துதல், சிறிய ஆம்புலன்ஸ்கள் மூலம் மலையகத்திற்கு ஆதரவு வழங்கி தோட்டத் துறைக்கு சேவையாற்றுவதுடன், மலையகத்தில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்திய அரசாங்கத்தின் உதவியை கோருதல் போன்ற விடயங்கள் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடினார்.

இலங்கையின் வளர்ச்சிக்கு தனது ஆதரவை வழங்குவதில் ஜெய் சங்கர் சாதகமான நிலையில் உள்ளார் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.