Print this page

'நான் அவனில்லை' - தமிழ் எம்பிக்களிடம் நேரடியாக கூறிய ரணில்

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விருப்பம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் ரணில் விக்ரமசிங்க என்றும் ரணில் ராஜபக்ச அல்ல என்றும் தெரிவித்தார்.

வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே தான் விரும்புவதாகவும் அதிலிருந்து அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கு அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு எக்காலத்திலும் அநீதி இழைக்கப் போவதில்லை எனவும், அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின், கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் பூரண ஆதரவைப் பெற வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.