Print this page

இலங்கை - இந்திய உறவின் வரலாற்று பதிவு, நாளை கப்பல் சேவை ஆரம்பம்

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை (14) ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய, பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படுமென அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர தெரிவித்தார். 

செரியாபாணி (Cheriyapani) எனும் பயணிகள் கப்பல் 100 பயணிகளுடன் நாகப்பட்டினத்தில் இருந்து நாளை 14 ஆம் திகதி காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.

மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த பயணிகள் கப்பல், 60 கடல்மைல் தூரத்தை 3 மணித்தியாலங்களில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

14 ஊழியர்கள் ,150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளைக் கொண்ட இந்த குளிரூட்டப்பட்ட கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்களை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஷ்வரத்திற்குமிடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.