Print this page

மன்னார் வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் போராட்டம்

November 01, 2023

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று புதன்கிழமை (1) காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்கள் தமக்கு வாரத்தில் 5 நாள் வேலையை வழங்க வேண்டும், மேலதிக நேர கொடுப்பணவை வரையறை இன்றி வழங்க வேண்டும், மின்சார கட்டண அதிகரிப்பை இரத்து செய், மருந்து தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்தனர்.

சுகாதார தொழிற்சங்கங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தினால் தூர இடங்களில் இருந்து வைத்திய சேவைக்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை விரைவாக வழங்காது விட்டால் அனைத்து அவசர சேவைகளையும் பகிஷ்கரித்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.