Print this page

அரச வைத்தியர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில்

November 02, 2023

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி, அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நாளை முதல் 24 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (02) ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பின்னர் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 3ஆம் திகதியும், வடமேற்கு மாகாணத்தில் 6ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணத்தில் 7ஆம் திகதியும் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 08ஆம் திகதி மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், எதிர்வரும் 09ஆம் திகதி தென் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி மேல்மாகாண அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.