Print this page

13 வயது சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு, மூவர் கைது

November 16, 2023

முல்லைத்தீவில் சட்டவிரோதமான முறையில் 13 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் மூவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் தாயாரின் திருமணமாகாத கணவனால் இந்த சிறுமி கர்ப்பமாக்கப்பட்டதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

திடீரென ஏற்பட்ட வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததையடுத்து முல்லைத்தீவில் வைத்தியரை சந்தித்து கருக்கலைப்பு செய்துள்ளார்.

பின்னர் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிறுமிக்கு சுகவீனம் ஏற்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறுமி நடந்த அனைத்தையும் வைத்தியரிடம் தெரிவித்தார்.

இது குறித்து வைத்தியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, கருக்கலைப்பு செய்த வைத்தியர், சிறுமியின் தாய் மற்றும் அவரது காதலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி தொடர்ந்தும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.