Print this page

ஹப்புதளையில் ரயில் மீது பாறை வீழ்ந்து விபத்து

November 17, 2023

ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று (17) அதிகாலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதத்தின் மீது பாரிய பாறாங்கல் ஒன்று விழுந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (17) அதிகாலை இரவு அஞ்சல் புகையிரதம் ஹப்புத்தளை நிலையத்தை கடந்து தியத்தலாவ நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, மலை உச்சியில் இருந்த பெரிய பாறாங்கல் ஒன்று 156/13 மைல் தூணுக்கு அருகில் திடீரென இரவு தபால் புகையிரதத்தின் மீது விழுந்துள்ளது.

ரயிலின் முன் எஞ்சின் ரயில் தண்டவாளத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விழுந்த பாறைகளில் ரயில் சிக்கிக் கொண்டதாக ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ரயில் பாதை மற்றும் இன்ஜினுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டு இன்ஜின்களுடன் இயங்கும் கொழும்பு பதுளை இரவு அஞ்சல் புகையிரதத்தின் முன்பக்க இயந்திரம் பாறைகளில் சிக்கியதையடுத்து, அதனுடன் பொருத்தப்பட்டிருந்த பின்பக்க இன்ஜின் இரவு அஞ்சல் ரயிலின் அனைத்து பெட்டிகளையும் மீண்டும் ஹப்புத்தளை நிலையத்திற்கு செலுத்தி தற்போது இரவு அஞ்சல் புகையிரதம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை நிலையத்தில் இருந்து பயணிகளுக்கு  பஸ்கள் மூலம் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.