Print this page

டீசலுக்கு 18% வெட் வரி விலக்கு

November 24, 2023

உத்தேச 18 சதவீத பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு பாதிப்பாக இருக்காது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று உறுதியளித்துள்ளார்.

“உத்தேச VAT அதிகரிப்பு குறித்த இறுதி முடிவு இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி எடுக்கப்படும். எவ்வாறாயினும் மண்ணெண்ணெய் மற்றும் டீசலுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

அம்பாந்தோட்டையில் இலங்கையின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவை உபகுழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாகவும், அடுத்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

"இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் இலங்கை பெட்ரோ-ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதிக்கு செல்லும்" என்று அவர் கூறினார்.

மேலும், ஆறு பெரிய மின் திட்டங்களை அரசாங்கம் அடுத்த மாதம் இறுதி செய்யும் என்றும் அமைச்சர் கூறினார். அதானி குழுமத்தினால் மன்னாரில் 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம், பூனரியில் 700 மெகாவாட் சூரிய மின் நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் 150 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், இலங்கையில் உள்ள அனைத்து 27,000 மத வழிபாட்டுத் தலங்களுக்கும், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், பிரதேச மற்றும் மாவட்ட செயலக அலுவலகங்களுக்கும் ஒரு வருடத்திற்குள் சோலார் பேனல்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.