Print this page

புதிய பொலிஸ் மா அதிபர் குறித்து ஜனாதிபதி இறுதித் தீர்மானம்

November 29, 2023

அடுத்த பொலிஸ் மா அதிபரை (IGP) நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி வசம் உள்ளது. இந்த பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய சி.டி. விக்கிரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றார்.

முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே பொலிஸ் மா அதிபர் நியமனம் தாமதமானதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியவுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். இது சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட பத்து உறுப்பினர்களைக் கொண்ட சபையாகும்.

உத்தேச நியமனத்திற்கு ஜனாதிபதியும் அமைச்சரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்தப் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவு செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்படுகிறது.