Print this page

கதிரையில் மீண்டும் சந்திரிக்கா

February 08, 2024

1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளையும் இணைத்துக்கொண்டு களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றியை பதிவு செய்து, அரியணையேறியது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தையும் இழந்தது.

எனினும், 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்த வெற்றியின் பின்னரே இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையுடன் புதிய அரசமைப்பு இயற்றப்பட்டது. 

அதன்பின்னர் 1982 இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி நடைபோட்டது. 

சு.க. ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் ஐதேகவின் அரசியல் பலம் உள்ளிட்ட காரணிகளால் சுதந்திரக் கட்சியால் மீண்டெழ முடியுமா என அரசியல் ரீதியில் அச்சம் ஏற்பட்டது. 1988 இல் நடைபெற்ற 2 ஆவது ஜனாதிபதி தேர்தலிலும் கை சின்னத்தில் களமிறங்கிய சுதந்திரக்கட்சி பின்னடைவை சந்தித்தது.  

1977 இற்கு பின்னர் 1989 இலேயே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. (சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நாடாளுமன்ற ஆட்சிகாலத்தை மேலும் ஒரு தவணைக்கு நீடித்துக்கொள்வதற்கு ஜே.ஆர். ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.)

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் கூட்டணியாக கதிரை சின்னத்தில் களமிறங்கியது. ( அதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் கை சின்னத்திலேயே அக்கட்சி தனித்து - கூட்டணியாக களமிறங்கியது)

இத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது, ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டு, சுதந்திரக்கட்சி மீண்டும் தலைதூக்கியது.   

மக்கள் கூட்டணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கிய அதன் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 4 இலட்சத்து 64 ஆயிரத்து 58 விருப்பு வாக்குகளைப்பெற்று வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.

இலங்கையில் விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இது அமைந்திருந்தது. (2015 இல் இச்சாதனையை கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க முறியடித்தார்.)

அதே ஆண்டு அதாவது 1994 நவம்பர் 9 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் கதிரை சின்னத்திலேயே சுதந்திரக்கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வெற்றியும் பெற்றது. இலங்கையில் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியை உருவாக்கிய தேர்தல் அது.

அதன்பின்னர் 2000, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் கதிரை சின்னமே சுதந்திரக்கட்சிக்காக களத்துக்கு வந்தது. 

அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கதிரை சின்னம் களத்துக்கு வரவில்லை. மக்கள் கூட்டணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக உதயமானது. வெற்றிலை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.  

2004 இற்கு பின்னர் அனைத்து தேர்தல்களிலும் சுதந்திரக்கட்சி வெற்றிலை சின்னத்திலேயே கூட்டணி அமைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக களமிறங்கியது. 

2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது. இதனால் அக்கட்சியின் வெற்றிலை சின்னமும் மாயமானது. மொட்டு சின்னம் ஆதிக்கம் செலுத்தியது. 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதும் மொட்டு கூட்டணியில் சுதந்திரக்கட்சி களமிறங்கினாலும் சில மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டியிட்டது. 

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சுமார் 23 ஆண்டுகளுக்கு பின்னர் ‘கதிரை’ சின்னத்துக்கு புத்துயிர் கொடுத்து களமிறக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. மக்கள் கூட்டணி தற்போதும் சுதந்திரக்கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணியாக செயற்படுகின்றது.

முன்னணியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவும், செயலாளராக லசந்த அழகியவண்ணவும் செயற்படுகின்றனர். முன்னணியின் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. தலைமைத்துவ சபையொன்றை உருவாக்கி அச்சபையின் தலைமைப்பதவியை சந்திரிக்கா அம்மையாருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், இக்கூட்டணி தொடர்பில் சந்திரிக்கா அம்மையார் இன்னும் எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி - ஆர் சனத்)