Print this page

கோப் குழுவின் புதிய தலைவர் ரோஹித

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் கோப் குழு முதல் தடவையாக இன்றையதினம் (07) கூடியபோதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தனவின் பெயரும் காமினி வலேபொடவின் பெயரும் முன்மொழியப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன அதனை வழிமொழிந்தார்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர்  ஹேஷா விதானகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரோஹித அபேகுணவர்தன மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார். 

குழுவின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குழுவில் தெரிவித்தார்.

அத்துடன், எந்தவித அரசியல், கட்சி பேதங்களும் இன்றி ஒரே குழுவின் உறுப்பினர்களாக அனைவருடனும் பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் கோப் குழுவின் உறுப்பினராக செயற்பட்ட போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள் ஊடாக அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கோப் குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பான முன்னேற்றம் பற்றி கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும், பரிந்துரைகளை செயற்படுத்தாத நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் நிலையியற் கட்டளைகளை திருத்துவதன் தேவையையும் குழுவின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். 

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான  ஜானக வக்கும்புற,  லொஹான் ரத்வத்த,  இந்திக அனுருத்த ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான  அனுர திசாநாயக்க,  ரவுப் ஹக்கீம்,  டிலான் பெரேரா,  மஹிந்தானந்த அளுத்கமகே,  இரான் விக்ரமரத்ன,  நளின் பண்டார ஜயமஹ,  ஹேஷா விதானகே,  சஞ்சீவ எதிரிமான்ன, ஜகத் குமார சுமித்ராறச்சி,  மேஜர் சுதர்ஷன தெனிபிடிய, உபுல் மகேந்திர ராஜபக்ஷ,  எம். ராமேஸ்வரன்,  காமினி வாலேபொட,  ராஜிகா விக்ரமசிங்க, மதுர விதானகே, (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.