Print this page

8000 அதிகரித்த கொடுப்பனவு

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் எட்டாயிரம் ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

புதிய மாணவர்களுக்கான உதவித்தொகையை செப்டெம்பர் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட பயிற்சி பெற்று தற்போது இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லை என நீண்ட காலமாக கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டு வந்த முறைப்பாடு அடிப்படையில் இந்த வருட ஆரம்பத்தில் கொடுப்பனவை மூவாயிரம் ரூபாவினால் அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அமைச்சரவையில் பிரேரணையை சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றிருந்த போதிலும், அமைச்சின் போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் இது வரை அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கிடைக்கும் பணத்தை நிர்வகித்து கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது ஒரு மாணவருக்கு ஒரு நாள் உணவுக்கு நூற்று அறுபது ரூபாய் கிடைப்பதாக கூறப்படுகிறது.